காணொலி உலகம்!

Wait 5 sec.

சில மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு காணொலி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. அதில் ஓர் உணவகத்தில் பணியாற்றும் இளைஞர் வயதான வாடிக்கையாளரை கட்டையால் அடிப்பது போன்ற காட்சி. சில விநாடிகள் மட்டுமே கொண்ட அந்தக் காணொலி இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது. இன்றைய இளைஞர்களுக்கு மரியாதை தெரியவில்லை; இப்படிப்பட்டவர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான கருத்துகள் பதிவாகின.ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தச் சம்பவத்தின் முழுமையான காணொலி வெளியானது. உண்மையில் மின் அதிர்ச்சியால் அந்த வயதானவருக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டபோது அருகில் யாரும் இல்லாத சூழலில் அந்த இளைஞர் அவசர முதலுதவியாக செயல்பட்டது தெரியவந்தது. கத்தரிக்கப்பட்ட காணொலியின் காட்சி ஒரு மனிதனின் மனிதநேயத்தையே அகங்காரமாக மாற்றிக் காட்டியிருந்தது.இன்றைய உலகில் தகவல்களின் வேகத்தை விட வேகமாக ஓடுவது மனிதர்களின் முடிவுகள்தான். உண்மையை அறிய பொறுமை இல்லை; ஆராய நேரமில்லை. ஆனால், கருத்து சொல்ல மட்டும் அவசரம் கூடுகிறது.ஒரு செய்தியைப் பார்ப்பதற்கு இன்று பத்து விநாடிகள் போதும். ஆனால், அதன் உண்மையைப் புரிந்து கொள்வதற்கு சில நேரங்களில் 10 நாள்கள் கூட போதுமானதாக இல்லை. அதற்குள் அந்தச் செய்தி உலகம் முழுவதும் சுற்றி வந்து ஆயிரம் தீர்ப்புகளை வழங்கி விடுகிறது.ஒரு காலத்தில் அறிவைத் தேடி மனிதன் நூலகங்களுக்குச் சென்றான். இன்று அறிவே மனிதனைத் தேடி அவன் கைப்பேசிக்குள் வந்து குவிகிறது. விரல் நுனியில் உலகம் இருப்பதாக நாம் பெருமிதப்படுகிறோம். ஆனால், அந்த உலகத்தை உண்மையில் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்குள் இருக்கிறதா என்ற கேள்வி தினமும் எழுந்து கொண்டே இருக்கிறது.இதை சாதாரணமாக யாரும் கடந்து விட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஓர் அனுபவம் இருக்கும். உடல் நலன் குன்றிய நாளில் விடுப்பு எடுத்து ஓய்வெடுத்த நேரம் கைப்பேசியில் விரல் விளையாட, நேரம் போனதே தெரியாமல் ஒரு மணி நேரம் கடந்து போனது. சரி, இந்த ஒரு மணி நேரத்தில் எதையாவது உபயோகமாக கற்றோமா அல்லது மனமாவது இலகுவானதா எனப் பார்த்தால் அப்படி ஒன்றும் நிகழவில்லை.பிறகு இவ்வளவு நேரம் வீணாகிப் போனதே என நினைத்து நினைத்து மனநலனும் சேர்ந்து குன்றியதுதான் மிச்சம். சமூக வலைதளத்தைப் பொறுப்புடன் கையாள வேண்டும், நேரத்தைத் திட்டமிட்டு செலவிட வேண்டும் என்ற புரிதல் உள்ளவர்களுகே அதன் தாக்கம் இப்படி இரு(ழு)க்கிறது என்றால் இளைய தலைமுறையினரை நினைத்தால் கவலையாக இருந்தது.காலையில் கண்விழித்தவுடன் தொடங்கும் செய்தி அறிவிப்புகள், சமூக ஊடகப் பதிவுகள், குறுஞ்செய்திகள், காணொலிகள், செயற்கை நுண்ணறிவு தரும் பதில்கள் என ஒவ்வொரு நிமிஷமும் ஆயிரக்கணக்கான தகவல்கள் நம் மனதைத் தட்டுகின்றன. ஆனால், அவற்றில் எத்தனை நம் சிந்தனையை வளர்க்கின்றன? எத்தனை நம் புரிதலை ஆழப்படுத்துகின்றன? அளவுக்கு அதிகமான தகவல் அறிவை வளர்ப்பதற்குப் பதிலாக சிந்தனையை மூழ்கடித்து விடுகிறது. முன்பெல்லாம் ஒரு செய்தி வந்தால், "அது ஏன் அப்படி நடந்தது? அதன் விளைவு என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?' என்று கேள்வி கேட்டு விவாதிப்பார்கள். அந்த இடைவெளியில்தான் புரிதல் பிறக்கிறது. இன்று இடைவெளியே இல்லை. ஒரு செய்தி முடிந்தவுடன் அடுத்த செய்தி; ஒரு காணொலி முடிந்தவுடன் அடுத்த காணொலி. மூளைக்கு செரிக்க நேரமே கொடுப்பதில்லை."கொஞ்சம் தெரிந்தவன் ஆபத்தானவன்' என்பார்கள். ஒரு மருத்துவக் குறிப்பை 30 விநாடி காணொலியில் பார்த்துவிட்டு இதுதான் மருந்து என்று சிலர் முடிவு செய்கின்றனர். ஒரு வரலாற்று நிகழ்வை மூன்று வரிகளில் படித்துவிட்டு இவர்கள்தான் காரணம் என்று சரியான புரிதலின்றி தீர்ப்பு எழுதுகின்றனர். புரிதல் இல்லாத தகவல் கையில் கிடைத்த ஆயுதம் போல அது நம்மையும் காயப்படுத்தி, பிறரையும் சேதப்படுத்தும்.இன்று ஒரு செய்தியைப் படிப்பதற்கு முன்பே அது குறித்த கருத்தை உருவாக்கி விடுகிறோம். ஒரு புத்தகத்தை முழுமையாக வாசிப்பதற்குப் பதிலாக அதன் சுருக்கத்தைப் பார்த்து தேர்ந்தெடுக்கிறோம். ஒரு மனிதரை நேரில் அறிந்து கொள்வதற்கு முன்பாக அவருடைய சமூக ஊடக பக்கத்தைப் பார்த்து தீர்ப்பு வழங்குகிறோம். உண்மையைத் தேடும் பொறுமை நம்மை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது.இன்றைய தலைமுறையின் மிகப் பெரிய சவால்} தகவல்களைப் பெறுவதில் இல்லை; அவற்றை தேர்ந்தெடுப்பதில்தான். ஒவ்வொரு நிமிஷமும் நம் கவனத்தைப் பிடிக்க ஆயிரம் குரல்கள் போட்டியிடுகின்றன. அந்த இரைச்சலுக்கு நடுவே உண்மையின் குரல் மிகவும் மெதுவாக ஒலிக்கிறது. அதிலும் செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இந்தக் காலத்தில் தகவல்களைச் சேகரிப்பது ஒரு திறமையே அல்ல. அந்தத் தகவலின் நம்பகத்தன்மையை ஆராய்வது, அதன் பின்னணியை புரிந்து கொள்வது, அதிலிருந்து புதிய சிந்தனையை உருவாக்குவது, இவைதான் உண்மையான அறிவின் அடையாளங்கள்.ஸ்க்ரோல் செய்வது, அதாவது தொடர்ச்சியாக திரையை நகர்த்துவது இன்று ஒரு பழக்கமாக அல்ல, ஒரு மன நிலையாகவே மாறிவிட்டது. படிக்க வேண்டிய நீண்ட கட்டுரையைத் தவிர்க்கிறோம். இரண்டு நிமிஷங்களுக்கும் மேலாக ஓடும் காணொலிகளைப் பொறுமையாக பார்க்க முடியாமல் வெளியேறுகிறோம்.எல்லாமே சுருக்கமாகவும் உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மனித வாழ்க்கையும் ஒரு தொடுதிரை போல இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அவ்வாறு இல்லையே. வாழ்க்கையின் மிகப் பெரிய பாடங்கள் எதுவும் "ஷார்ட்ஸ்' வடிவில் கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். வாழ்க்கையில் சில தருணங்களை நிறுத்திப் பார்க்க வேண்டும், சில மனிதர்களுடன் அமர்ந்து பேச வேண்டும், சில புத்தகங்களை மெதுவாக வாசிக்க வேண்டும், சில அமைதிகளை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ள பயணம் என்பதை உணர முடியும்.நம் அண்டை மாநிலத்தில்கூட 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டு வருவது என்ற சிக்கல் நீடிக்கும் நிலையில் மாற்று சிந்தனைகள் தேவைப்படுகின்றன. சிறார்களின் மன நலன் மற்றும் இணையப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு நாடுகள் இதற்கான சட்டங்களை அமல்படுத்தியுள்ளன.தற்போதைய நிலவரப்படி 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பதை சட்டரீதியாக தடை செய்த முதல் நாடு ஆஸ்திரேலியா. இந்தச் சட்டம் 2025 டிசம்பர் 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. முகநூல் (ஃபேஸ்புக்), இன்ஸ்டாகிராம், டிக்- டாக், ஸ்னாப் ஷாட், எக்ஸ், யூ}டியூப், ரெடிட் உள்ளிட்ட முக்கிய தளங்கள் 16 வயதுக்குக் குறைவான ஆஸ்திரேலியர்களுக்கு கணக்கு வழங்கக் கூடாது என்ற சட்டம் அமலில் இருக்கிறது. பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.மேலும், இவர்களுக்கு இரவு நேர சமூக வலைதள கட்டுப்பாடுகளும் முன்மொழியப்பட்டுள்ளன. ஸ்பெயின், பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற சட்டங்களை ஆய்வு செய்து வருகின்றன. அங்கு முழுமையான சட்டமாக இன்னும் அமல்படுத்தப்படவில்லை.பயனர்கள் பயன்படுத்தும் கால அளவு, முக அடையாளம், குரல் பகுப்பாய்வு மற்றும் பள்ளி நேரத்துடன் ஒத்துப்போகும் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டு அந்த நாடுகளில் தற்போது ஆராயப்படுகிறது. இந்தப் பகுப்பாய்வுகள் ஒருபுறம் இருக்க, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்தும் போது செயற்கை நுண்ணறிவு மூலம் அவர்களின் தனித்துவமான அளவீடுகள் கொண்ட முகஅடையாளத்தைப் படம்பிடித்து அதன் மூலம் வயதைக் கணித்து அவர்கள் பார்க்கக் கூடாத காட்சிகள் தானாகவே தணிக்கை செய்யப்பட்டு பார்வைக்கு கிடைக்கும்படியாக கைப்பேசியை வடிவமைத்தால் நன்றாக இருக்கும்.இதற்கு கைப்பேசியைத் தயாரிக்கும் நிறுவனங்கள் முன் வர வேண்டுமே! வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதைத்தான் அந்த நிறுவனங்கள் ஊக்குவிக்குமே தவிர, குறைவதை ஏற்காது. வேண்டுமானால் அதற்கென பிரத்யேகமாக ஒரு செயலியை வடிவமைத்து விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இதெல்லாம் மாற்று யோசனையாக மனதில் நிற்பவை. இன்றைய பொறியியல் வல்லுநர்கள் இதைத் தாண்டி எண்ணற்ற புதுமைகளை செய்ய இயலும்.நம் கண்ணுக்குத் தெரியாத, கவனத்துக்கு வராத, உணர்வுகளுக்குப் புலப்படாத, இன்னும் நம் மூளையின் எல்லைக்கு எட்டாத எத்தனையோ பாதிப்புகள் 16 வயதுக்குட்பட்ட நம் குழந்தைகளுக்கு தினமும் ஏற்படுகின்றன. அவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கையிலும் உள்ளது.கட்டுரையாளர்:எழுத்தாளர்.