மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவிடம் 3 அம்ச கோரிக்கை மனு அளித்த சிஜேபி

Wait 5 sec.

நமது நிருபர்மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும், நீட்-இளநிலை தேர்வு வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்பதுடன் நீட் தேர்வு மன உளைச்சலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கை மனுவுடன் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கட்சி செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரன்கா ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர். தில்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சிஜேபி கட்சியினர் புறப்பட்ட வேளையில், மறுபுறம் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சௌரவ் தாஸும் ஆஷுதோஷ் ரன்காவும் பகல் 11:50 மணியளவில் சந்தித்தனர். இது குறித்து சௌரவ் தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்களது கோரிக்கைகள் அடங்கிய அதிகாரபூர்வமான கடிதத்தை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளோம். மத்திய அரசின் உயர்நிலையில் கோரிக்கைகள் குறித்து பேசுவதாக அவர் உறுதியளித்துள்ளார். அதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன என அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு உறுதியான வாக்குறுதியும் வழங்கப்படவில்லை. எனவே, எங்களது நியாயமான கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, அமைதி முறையிலான எங்களுடைய போராட்டம் ஓயாது' என்றார். மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவிடம் சிஜேபி சார்பில் அளிக்கப்பட்ட மனுவை தனது "எக்ஸ்' சமூக ஊடக பக்கத்தில் சௌரவ் தாஸ் பகிர்ந்துள்ளார். அதில், "நீட் தேர்வு முறைகேடு புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும், காவல் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் உள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில், "வரலாற்றிலேயே முதன்முறையாக, அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவு போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து இன்று காலை வந்தது. அதைத் தொடர்ந்து, இன்று காலை 11:50 மணி முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சந்திப்பு மிகவும் சுமுகமான சூழலில் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் கோரிக்கைகள் அடங்கிய எழுத்துபூர்வ மனுவை சமர்ப்பித்தனர். போராட்டக்காரர்கள் அனைவரும் தங்களது தர்னா போராட்டத்தைக் கைவிட்டு, இயல்பு நிலையை திரும்ப நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்.இதே வேளையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிஷங்கள் இந்த சந்திப்பு நீடித்த நிலையில், இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்ன என்பது வெளியிடப்படவில்லை.