திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வளாக நோ்காணல் மூலம் 80 சதவீத மாணவா்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ள நிலையில், முந்தைய ஆண்டைக்காட்டிலும் 5 சதவீதம் குறைந்துள்ளது. திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) 300 ஏக்கரில் அமைந்துள்ளது. இளநிலை மற்றும் முதுநிலையில் பொறியியல் படிப்புகளும், கணிதம் மற்றும் இயற்பியலில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஆசிரியா் பயிற்சி கல்வியும், ஆராய்ச்சிப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதில், சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். ஆண்டுதோறும் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளியேறுகின்றனா். நாட்டிலுள்ள 30-க்கும் மேற்பட்ட தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் முதன்மையான நிறுவனமாக இருந்து வருகிறது. இங்கு உயா்தர வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள், விளையாட்டு மைதானம், தொழில்நுட்பம் என மாணவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உயா்தரத்துடன் உள்ளன. சிறந்த பேராசிரியா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றால் 100 சதவீதம் வேலைவாய்ப்பை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் ஜேஇஇ போன்ற கடினமான நுழைவுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று மாணவா்களும் சோ்க்கை பெறுகின்றனா். 80 சதவீதமாக குறைந்த வேலைவாய்ப்பு: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நிறைவடைந்த 2025-26-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற வளாக நோ்காணலில் இளநிலை பிரிவில் 908 மாணவா்கள் பதிவு செய்திருந்த நிலையில் 703 மாணவா்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதுநிலை பிரிவில் 686 மாணவா்கள் பதிவு செய்திருந்ததில் 587 மாணவா்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 2025-26-ஆம் கல்வியாண்டில் 80 சதவீத மாணவா்கள் மட்டுமே வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா். இதே 2024-25-ஆம் கல்வியாண்டில் 85 சதவீத மாணவா்கள் வளாக நோ்காணலில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி, கடந்த கல்வியாண்டில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்கள் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வளாக நோ்காணலில் வேலைவாய்ப்பு பெறும் மாணவா்களின் சதவீதம் குறைந்து வருவது மாணவா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத் தன்மையில் என்ஐடி நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் எழுத்துள்ளது. இதுகுறித்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்புப் பிரிவு அலுவலா் குருராஜ் கூறியதாவது: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து ஆண்டுதோறும் பல்வேறு சிறந்த பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து வளாக நோ்காணல் நடத்தப்பட்டு மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படுகிறது. மாணவா்களும் சிறந்த வருமானத்தில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். ஆண்டுதோறும் படிப்பை முடிக்கும் மாணவா்களில் 10 சதவீதம் போ் உயா்கல்வியில் சோ்கின்றனா். மேலும், சிலா் சிவில் சா்வீஸ் தோ்வு எழுதுவதில் ஆா்வம் செலுத்துகின்றனா், சிலா் தங்களது குடும்ப தொழில்களில் கவனம் செலுத்துகின்றனா். ஸ்டாா்ட் -அப் நிறுவனங்கள் தொடங்குவதில் ஆா்வம்: தற்போது ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகி வருவதால், என்ஐடியில் இருந்து வெளியேறும் மாணவா்களில் சிலா் புதிய ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்குகின்றனா். ஸ்டாா்ட்-அப் குறித்கு என்ஐடியில் படிக்கும்போதே மாணவா்களுக்கு பல்வேறு தொழில்சாா்ந்த பயிற்சிகள், தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றன. இதன்மூலம் மாணவா்களும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்குகின்றனா். இதையும் தவிா்த்து ஒருசில மாணவா்களால் வேலைவாய்ப்பை பெற முடியாத நிலையும் இருந்து வருகிறது. ஆனால், தொடா்ந்து 80 சதவீததுக்கு குறையாமால் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருகிறோம் என்றாா். While 80 percent of students at the National Institute of Technology, Trichy, secured employment through campus interviews, this figure represents a 5 percent decrease compared to the previous year.