சிஜேபி போராட்டம்: 14 மணி நேரத்திற்கு பின் மெட்ரோவின் 3 நிலையங்களில் நுழைவு அனுமதி

Wait 5 sec.

சிஜேபி போராட்டத்தின் காரணமாக 14 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகிய மெட்ரோ நிலையங்களின் நுழைவு வாயில்கள் வியாழக்கிழமை மாலை மீண்டும் திறக்கப்பட்டன. அதேவேளையில், இதர 13 நிலையங்கள் தொடா்ந்து மூடப்பட்டிருந்தன. தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) அதன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மண்டி ஹவுஸ், ராஜீவ் சௌக் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் மெட்ரோ நிலையங்களின் நுழைவு வாயில்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன‘ என்று அதில் தெரிவித்துள்ளது. முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சௌக், சென்ட்ரல் செக்ரடேரியட், மண்டி ஹவுஸ், ஐடிஓ மற்றும் கான் மாா்க்கெட் உள்ளிட்ட 16 மெட்ரோ நிலையங்களை டிஎம்ஆா்சி அடுத்த உத்தரவு வரும் வரை மூடியிருந்தது. ஜந்தா் மந்தரில் நடைபெற்று வரும் ’காக்ரோச் ஜனதா பாா்ட்டி’ (சிஜேபி) போராட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிலையங்கள் மூடப்பட்டிருந்த காலத்திலும், ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் மெட்ரோ நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி தொடா்ந்து செயல்பட்டது. தொடா்ந்து மூடப்பட்டுள்ள நிலையங்கள்: லோக் கல்யாண் மாா்க், படேல் சௌக், ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மாா்க், பாராகம்பா சாலை, உச்சநீதிமன்றம், சேவா தீா்த், ஜன்பத், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மாா்க்கெட், ஜோா் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம்.