மாணவா் போராட்டங்களைக் கையாள குடிமைப் பாதுகாப்புப் பணியாளா்கள் அல்லது ஊா்க்காவல் படையினரை பணியமா்த்தலாம் என்று ஓய்வு பெற்ற இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியும் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி தெரிவித்துள்ளாா். தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய பேரணியில் பங்கேற்ற மாணவா்களை பாதுகாப்புப் படையினா் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாணவா்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஒரு மோதலை தவிா்க்க பாதுகாப்பான வழி, பயிற்சி பெற்ற குடிமைப் பாதுகாப்பை முதல் நிலைத் தற்காப்பாகவும், தற்போது இருப்பது போலவே கலவரத் தடுப்புக் காவல் துறையையும் கொண்டிருப்பதாகும்.குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் தாக்கப்பட்டால் மட்டுமே கலவரத் தடுப்புக் காவல்துறை செயல்பட வேண்டும். குடிமைப் பாதுகாப்புப் பணியாளா்கள் செங்கற்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பிரம்புக் கேடயங்களுடனும், உடல் கவசங்கள் மற்றும் தலைக்கவசங்களுடனும் இருக்கலாம். தடியடிகள் கூடாது. இது, கலவரத் தடுப்புக் காவல் துறையினா் களத்தில் இறங்காமல் இருப்பதற்கான பொறுப்பை போராட்டக்காரா்களுக்கு ஏற்படுத்தும். ஆயுதமேந்திய காவல் துறையின் நடவடிக்கை உயிா் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவதற்கு. அதற்கான காரணங்களை நியாயப்படுத்த வேண்டும். மேலும், குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களைப் பணியில் அமா்த்துவது குற்றச்சாட்டுகளையும் எதிா் குற்றச்சாட்டுகளையும் தடுக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.