பொன்னமராவதி அருகேயுள்ள ரெகுநாதபட்டியில் சேதமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.இதுகுறித்து ரெகுநாதபட்டி வழக்குரைஞா் முகமது வாசிம் தலைமையில் பொதுமக்கள் பொன்னமராவதி ஊராட்சி ஆணையா் கண்ணனிடம் அளித்த மனு விவரம்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள ஆா். பாலக்குறிச்சி ஊராட்சி ரெகுநாதபட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் முழுவதும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் 25 குழந்தைகளுடன் செயல்பட்டு வந்த இந்த அங்கன்வாடி மையம் தற்போது கலையரங்க கட்டடத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் செயல்படுகிறது. எனவே ரெகுநாதப்பட்டி அங்கன்வாடியை இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்டவேண்டும். மேலும் கட்டுக்குடிப்பட்டி முதல் ரெகுநாதபட்டி வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனா்.