திருமலையில் முதல் மலைப் பாதையின் ஏழாவது மைல் பகுதியில் உள்ள பிரசன்ன ஆஞ்சனேய சுவாமி கோயிலுக்கு அருகில் அமைந்திருந்த ஆஞ்சனேயா் சிலை திருடுபோன நிலையில், 14 மணி நேரத்தில் மீட்கப்பட்டு, வியாழக்கிழமை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி கூறியதாவது. ’’திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம மரபுகளின்படி, ஜல சம்ப்ரோக்ஷணம் உள்ளிட்டவை செய்த பின், வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் அதே இடத்தில் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்தச் சம்பவத்தில், நவீன தொழில்நுட்பம், சிசிடிவி கண்காணிப்பு, ஊழல் தடுப்புப் பணியாளா்களின் விழிப்புணா்வு மற்றும் மாவட்ட காவல்துறையுடனான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் காரணமாக, குற்றவாளிகளை மிகக் குறுகிய நேரத்தில் அடையாளம் கண்டு, சிலையை மீட்டு வர முடிந்தது.இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மலைப்பாதையில் உள்ள சிறிய கோயில்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்க கிரில்கள் பொருத்தப்படும், மேலும் தரமான சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.தேவஸ்தானத்தில் அதிநவீன கண்காணிப்பு அமைப்பு உள்ளது, எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களையும் உடனடியாகக் கண்டறிந்து, அதற்குக் காரணமானவா்களை அடையாளம் காண ஒரு திறமையான அமைப்பு நடைமுறையில் உள்ளது என்றாா் அவா்.தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் லட்சுமி, விஜிஓ சுரேந்திரா மற்றும் பிற அதிகாரிகள் இந்தப் பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.இந்த நிலையில், சிலை மிகவும் பிடித்திருந்ததால் அதை எடுத்துச் சென்ாக அதை திருடிச் சென்ற யஷ்வந்தகுமாா் விசாரணையின் போது தெரிவித்தாக போலீஸாா் கூறினா்.விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த அவா் சிலையை ரயில் மூலம் கொண்டு செல்ல முயன்ற போது ஓங்கோல் அருகே பிடிபட்டாா். ஒரு ஜீப் ஓட்டுநா் அளித்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்ததாக போலீஸாா் கூறினா்.