மருத்துவராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி வன்னியர் சங்கம் வழியாக பாமக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்களுக்குக் காரணமாக இருந்ததுடன், எத்தனையோ ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, தவிர்க்க முடியாத தலைவராக இருந்த மருத்துவர் ராமதாஸ் திடீரென அரசியல் துறவறத்தை அறிவித்திருக்கிறார்.இங்கே முடித்த அவர், எங்கே தொடங்கினார், எப்படி வந்தார்... ராமதாஸின் அரசியல் பயணங்கள் குறித்து இங்கே...விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள கீழ்சிவரி கிராமத்தில் 1939 ஜூலை 25 ஆம் தேதி சஞ்சீவிராயக் கவுண்டர் - நவநீத அம்மாள் தம்பதியருக்கு நாலாவது மகனாகப் பிறந்தவர் ராமதாஸ். ஒருவர் சகோதரி, மூவர் சகோதரர் ஆவர். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராமதாஸ். இவர் ஆசிரியர்கள், உறவினர்களின் உதவியோடுதான் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் உள்ள காந்திஜி ஆதாரப் பள்ளியிலும், தனது மருத்துவப் படிப்பை 1959 முதல் 1965 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் முடித்தார். மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர் 1965 முதல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் ஏழை மக்களுக்காக மருத்துவம் பார்ப்பதற்காக தனியாக க்ளினிக் தொடங்கி குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்தார். தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் ஏழை மக்களுக்கு பேருந்துக்குகூட பணம் கொடுத்து உதவுமளவுக்கு மனிதாபிமானமிக்கவராகவும், 2 ரூபாய், 5 ரூபாய் என மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து கைராசியான மருத்துவர் என பெயரெடுத்தார்.பின்னர் சரஸ்வதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்புமணி என்ற மகனும், ஶ்ரீகாந்தி, கவிதா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். அன்புமணி பாமக தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். செவிலியரான சுசீலா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.1980-ல் வன்னியர் சங்கம்வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலை குறித்து சிந்திக்கத் தொடங்கி மருத்துவர் ராமதாஸ், அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என்று கூறி, வன்னியர் சமுதாய அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் விளைவாக 28 வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து, ஓய்வுபெற்ற தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஈ.பி. ராயப்பா, முன்னாள் எம்.பி கிடங்கல் ஏ.ஆர்.சம்பந்தம், பேராசிரியர் தீரன், ஏ.கே.நடராசன் உள்ளிட்ட வன்னியர் சமுதாயத் தலைவர்களுடன் சேர்ந்து 'வன்னியர் சங்கம்' என்ற புதிய அமைப்பை 1980 ஜூலை 20 ஆம் தேதி தொடங்கினார்.தனி இட ஒதுக்கீடு கோரி ஈரோட்டில் முதல் மாநாடுஅதன் தொடர்ச்சியாக, வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி - வேலைவாய்ப்பில் 'தனி இட ஒதுக்கீடு' வேண்டும் என்று கேட்டு, 1980-ஆம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் இட ஒதுக்கீடு கோரி முதல் மாநாட்டை நடத்தினார். 'கனல்' இதழ்தமிழகத்தில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று, மக்கள் சந்திப்பை நடத்தினார். 'கனல்' என்ற இதழைத் தொடங்கி எழுதியும் வந்தார். இதன் விளைவாக அரசியல், பொருளாதாரம், வணிகம் என திசைக்கொரு புறமாகப் பிரிந்து கிடந்த வன்னியர் சமுதாய மக்கள் ஒன்று திரட்டினார்.அதன் தொடர்ச்சியாக 1984 இல் சென்னை மெரினா கடற்கரையில் பட்டினிப் போராட்டம், 1985 இல் சென்னையில் லட்சக்கணக்கானோருடன் பேரணி மற்றும் மாநாடு என தொடர்ந்து, 1986 இல் பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பட்டை நாமப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம், ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் எனத் தொடர் போராட்டங்களை நடத்தினார்.தொடர் சாலைமறியல் போராட்டமும்... காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியும்...மிக, மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமூக நீதி பெற்றுத் தருவதற்காக "அனைத்துச் சாதியினருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, வன்னியர் சாதியினருக்கு மாநிலத்தில் 20 சதவீதம், மத்தியில் 2 சதவீதம் தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீததில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்" போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, 17.9.1987 முதல் 23.9.1987 வரை ஒரு வாரம் தொடர் சாலைமறியல் போராட்டத்தை வன்னியர் சங்கம் சார்பில் அறைகூவல் விடுத்தார். அவரது அறைகூவலை ஏற்று, எதையும் எதிர்பார்க்காமல் களமிறங்கி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பேருந்துகள் கல்வீச்சு, சாலைகள் துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு, சாலை ஒரங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலைகள் நடுவே போடப்பட்டால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன. ஒரு வாரம் நடந்த இந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தேசிங்கு, வேலு, கோவிந்தன் முதலான 21 பேர்உயிர்த் தியாகம் செய்தனர். ராமதாஸ் உள்பட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்தச் சம்பவத்தின்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழகம் திரும்பியதும் ராமதாஸ் மற்றும் அனைத்துச் சமுதாயத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்த எம்ஜிஆர், ஒரு மாதத்துக்குள்ளாகவே காலமானார். பின்னர், 1989-ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல்வரான கருணாநிதி, வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை 'மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' (எம்பிசி) என்ற புதிய பட்டியலில் இணைத்து 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார். தொடர் போராட்டங்கள் அடுத்து வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். இதன் மூலம் அந்த சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற்றனர். 1989-ல் பட்டாளி மக்கள் கட்சி தொடக்கம்பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு தேர்தலைப் புறக்கணித்து அரசியல் சார்பற்ற இயக்கமாக செயல்பட்டு வந்த 'வன்னியர் சங்கம்', 1989 ஜூலை 16 ஆம் தேதி சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு 'பாட்டாளி மக்கள் கட்சி'யைத் தொடங்கினார். புதிதாகக் கட்சி ஆரம்பித்த ராமதாஸ், "நான் வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள். சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது, இவை என் இறுதிமூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும், லஞ்சம், ஊழல் செய்தால் பொது மேடையில் வைத்து சாட்டையால் அடிக்காலம்" என தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி பூர்வமான உறுதிமொழிகளை அறிவித்தார். ஆனால் அவையெல்லாம் மாற்றியது வேறு கதை...பிறமொழிக் கலப்பில்லாத செய்தி ஊடகங்கள்தமிழ்மொழி வளர்ச்சிக்காக 'பொங்கு தமிழ்' அறக்கட்டளையை தொடங்கினார். தமிழ் வளர்ச்சிக்காக பிறமொழிக் கலப்பில்லாத 'அலை ஓசை' செய்தித்தாள், 'மக்கள் தொலைக்காட்சி' போன்ற செய்தி ஊடகங்களைத் தொடங்கினார்.தமிழிலேயே பெயர் சூட்டப்பட வேண்டும்தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழிலேயே பெயர் சூட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். சாதிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தில் 100 இடங்களில் அம்பேத்கர் சிலைகள் நிறுவும் திட்டத்தை ஆரம்பித்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வராக வர வேண்டும் எனக் குரலெழுப்பினார்.தமிழ்க் குடிதாங்கி1988-இல் கும்பகோணம் அருகில் உள்ள குடிதாங்கி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர் சமுதாயம் வசிக்கும் பகுதி வழியாகக் கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தானே நேரடியாகச் சென்று வன்னிய மக்களின் எதிர்ப்பையும் மீறி சடலத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்தார். இதன் காரணமாக, ராமதாஸை 'தமிழ்க் குடிதாங்கி' என்று அழைத்தார் இன்றைய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.தமிழர் வாழ்வுரிமை மாநாடுதேர்தல் அரசியலைத் தாண்டி, தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் 1992 இல் ஆண்டு சென்னை பெரியார் திடலில் 'தமிழர் வாழ்வுரிமை மாநாடு' நடத்தி, தமிழீழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த மாநாட்டையொட்டி நடந்த பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படத்தைப் பிடித்து "`பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை" என்று தனித்தமிழீழத்துக்கு ஆதரவான முழக்கங்களும் அரங்கேறியது. இதையடுத்து ராமதாஸ் உள்ளிட்டோரை தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. தமிழ்மொழி, தமிழர்களின் உரிமை சார்ந்த முன்னெடுப்புகளையும் எடுத்து வந்த ராமதாஸ், கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய மக்களுக்கு இருந்த சில நெருக்கடிகளை உடைத்து இஸ்லாமிய மக்களின் ஆதரவையும் பெற்று செல்வாக்குமிக்க தலைவராக வலம் வந்தவர், காலப்போக்கில் தனது நிலைப்பாட்டைத் தளர்த்தி மீண்டும் சாதிய அரசியலுக்குள் தன்னைச் சுருக்கிக்கொண்டது நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விமருத்துவர் ச.ராமதாஸ் 1989 மக்களவைத் தேர்தலில் 33 இடங்களில் தனித்து போட்டியிட்ட பாமக அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. ஆனால் கட்சி தொடங்கி சில மாதங்களிலே 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 6 சதவீத வாக்குவங்கியை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து 1991 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 31 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையே திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தோல்விக்கு காரணம் என அப்போது பேசும் பொருளாக இருந்தது. 1996 மக்களவைத் தேர்தலில், வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 15 இடங்களில் போட்டியிட்ட பாமக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த பாமக1998 இல் மத்தியில் இருந்த தேவகவுடா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்தது போட்டியிட்ட ஐந்து இடங்களில் நான்கு இடங்களில் பாமக வெற்றி பெற்றது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமக பொதுச்செயலாளர் தலித் எழில்மலை சுகாதாரத்துறை இணை அமைச்சரானார். 1999 இல் பாஜக ஆட்சி ஜெயலலிதாவால் கவிழ்க்கப்பட்து. இதையடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் எட்டு இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. என்.டி.சண்முகம் சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும், இ.பொன்னுசாமி பெட்ரோலியத்துறை அமைச்சராகவும், ஏ.கே.மூர்த்தி ரயில்வே துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.2004 இல் நடைப்பெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களிலும் வெற்ற பெற்றது. பாமக சார்பில் ஆர்.வேலு ரயில்வே துறை இணை அமைச்சராகவும், ராமதாஸ் மகன் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றார். 2009 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஆறு இடங்களிலும் போட்டியிட்ட பாமக, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. 2014 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்பாஜக கூட்டணியில் எட்டு இடங்களில் போட்டியிட்ட பாமக, தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார். 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏழு இடங்களில் போட்டியிட்ட பாமக, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. கூட்டணி ஒப்பந்தப்படி அதிமுக சார்பில் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட, அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் பாமக தலைவர் ச.ராமதாஸ் சட்டப்பேரவைத்தலில் பாமக1991 சட்டப்பேரவைத் தேர்தலில் யானை சின்னத்தில் தனித்துப் போட்டியிட்ட பாமக, பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரனை யானை மீது அமரச் செய்து பேரவைக்கு அழைத்துச் சென்றனர் பாமகவினர். 1996 பேரவைத் தேர்தலில் திவாரி காங்கிரஸ் உடன் சேர்ந்து 116 இடங்களில் போட்டியிட்ட பாமக, ஆளுங்கட்சிக்கு எதிராக வீசிய அலையையும் மீறி, நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. 2001 பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து 27 இடங்களில் போட்டியிட்ட பாமக, 20 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவுடன் பாமக தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் 2006 பேரவைத் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து 34 இடங்களில் போட்டியிட்ட பாமக, 18 இடங்களில் வெற்றி பெற்று வெற்றிப்பாதையில் வலம் வந்து கொண்டிருந்தது. ஆனால், அதன் பின் வெற்றிகள் பாமகவுக்கு வசமாகவில்லை. 2011 பேரவைத் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து 30 இடங்களில் போட்டியிட்ட பாமக மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.2016 பேரவைத் தேர்தலில் பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணிஅறிவிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் 5.3% வாக்குவங்கியைப் பெற்றது பாமக. 2021 பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, அந்த கட்சியின் தலைவர் அன்புமணி துணைவியார் சௌமியா அன்புமணி போட்டியிட்ட 5 இடங்களில் பாமக வெற்றி பெற்றது. சாதனைகள்... தனது கட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பொதுச் செயலாளராக வரமுடியும் என்ற விதியைக் கொண்டு வந்தது. வன்னியர் உள்ளிட்ட 108 சமுதாயங்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு மற்றும் அதில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத தனி உள் ஒதுக்கீடு.தமிழகத்தில் அதிகமான அம்பேத்கர் சிலைகளைத் திறந்தது...சமச்சீர் கல்வி, மது ஒழிப்புக்கு ஆதரவான போராட்டங்கள், மாநில உரிமை சார்ந்த போராட்டங்கள், கருத்துப் பிழைகள் இல்லாத அறிக்கைகள்..கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்...பசுமைத்தாயகம் அமைப்பை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு போன்ற செயல்பாடுகள்...பூரண மது ஒழிப்புக்காகச் சட்டப் போராட்டம் நடத்தி மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை குறைக்கவும், தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வழிவகை செய்தது.2002-2003 நிதி ஆண்டு முதல் பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை மற்றும் 2008-2009 நிதி ஆண்டு முதல் மாதிரி வேளாண் அறிக்கை வெளியிட்டு வருவது...தமிழ் வளர்ச்சி சார்ந்த முன்னெடுப்புகள், தமிழர் உரிமை சார்ந்த போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது... தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்துள்ளது. மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பில் பட்டியலின மாணவர்களுக்கு 15%, பழங்குடியின மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தது. மது விலக்கிற்காகவும் தமிழக மக்களின் மீது திணிக்கப்படும் மது மற்றும் அதன் கேடுகளில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடி வந்தது, சுகாதாரம் சார்ந்து கொண்டுவரப்பட்ட திட்டங்கள், எல்லாவற்றையும்விட இந்த வயதிலும் தமிழைத்தேடிய பயணம், அரசியல் நிகழ்வுகளுக்கு உடனடி பதில் அறிக்கைகள் என சுறுசுறுப்பாக இயங்கி வந்தது மருத்துவர் ராமதாஸின் சாதனைகளாகப் பார்க்கப்படுகின்றன.சர்ச்சைகள்... ராமதாஸின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டு வந்ததாலும், காலப்போக்கில் அவரது செயல்பாடுகளின் மாற்றங்களால் சாதி அரசியல், தருமபுரி, மரக்காணம், பொன்பரப்பி போன்ற சாதிக் கலவரங்கள், ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறுவது, கட்சி ஆரம்பித்த போது அளித்த "நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள். சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது, லஞ்சம் வாங்கினால் பொது மேடையில் வைத்து சாட்டையால் அடிக்காலம் என தொண்டர்கள் மத்தியில் அளித்த சத்தியத்தை மீறி வாரிசு அரசியல் செய்து, தனது மகன் அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பாமக இளைஞரணித் தலைவராகவும், பின்னர் பாமக தலைவராக்கியது, வன்னியர் கல்வி அறக்கட்டளையைத் தனது பெயருக்கு மாற்றியது, திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே இல்லை எனச் சொல்லிவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது, 2012-2014 காலகட்டத்தில், பாமக முன்னெடுத்த அனைத்து சமுதாயக் பேரமைப்பு எனும் செயல்பாடு உள்ளிட்டவை ராமதாஸ் மீதான முக்கியமான விமர்சனங்களாக பார்க்கப்படுகின்றன.தனது 88 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் அரசியல் துறவறம் அறிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த நிலையில், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனது 88 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், எனக்கு இன்று 88 ஆவது பிறந்த நாள். இன்று முதல் அரசியல் துறவறம் செய்கிறேன். அரசியல் துறவறம் என்றால், இன்று முதல் அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன். இனி அரசியலை, பாமகவை அன்புமணி, அவரது துணைவியார் பார்த்துக்கொள்வார். எனக்கு தலைசுற்றல் இருந்ததால் 20 நாள்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னை பார்க்க வருபவர்கள், என்னிடம் நலம் விசாரிக்கலாம். அரசியல் பேச வேண்டாம். என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம். உங்களை பார்க்க ஆவலோடு ஓடி வந்துள்ளேன். உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு என்றும் மாறாது என்று கூறினார்.46 ஆண்டுகளாக தமிழக அரசியலில் ராமதாஸின் தொடக்கமும் இந்தப் பயணத்தின் வலிகளும் வேதனைகளும் வெற்றிகளும் நிறைந்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளின் கசப்பைத் தன் பிறந்த நாளில் இனிப்பாக மாற்ற முயன்றிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்!The political journey of Ramadoss—who announced his retirement from active politics-from then until now...!அரசியல் துறவறம் அறிவித்தார் ராமதாஸ்!