பாஜக (மோடி) அரசின் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நாட்டில் கடந்த மே 3 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வுக்கு முன்னர் வினாத்தாள் கசிந்ததாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது மாணவர்களிடையே கடும் மன உளைச்சலை உண்டாக்கியது. மிகவும் சாதாரணமாக, ஜூன் 27 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. நாட்டில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால் மற்றும் அழுத்தத்தால் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் கூறி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் தில்லியில் போராட்டத்தைத் தொடங்கினர். கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடைந்தது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து சில நாள்களுக்கு முன்பு மத்திய அமைச்சர்களின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அமைச்சர் ராஜிநாமா இந்நிலையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக இன்று பிற்பகல் வரை கால அவகாசம் கோரியிருந்த நிலையில் சிஜேபி கட்சியினரின் வலியுறுத்தலுக்கு ஏற்ப, அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று பதவி விலகியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014ல் முதல்முறையாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. மோடி பிரதமரானார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி இருந்து வருகிறது. இந்த 12 ஆண்டு காலத்தில் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடந்திருந்தாலும் எந்த அமைச்சரும் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகவில்லை. ரயில் விபத்துகளுக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் இந்தியா - பாகிஸ்தான் போர், சீன விவகாரம் உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன. ஆனால் இப்போது யாரும் எதிர்பாராத வகையில் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள இளைஞர்களின் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யின் கோரிக்கைக்கு பாஜக அரசு முதல்முறையாக செவிசாய்த்துள்ளது. இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் பாஜக இதுவரை செய்யாததை இன்று செய்துள்ளது. நாடு முழுவதும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததாலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலினாலும் 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் முதல்முறையாக ஒரு அமைச்சர் பதவி விலகியுள்ளார். தர்மேந்திர பிரதானுக்கு வேறு துறை வழங்கப்படலாம் என்றும் அல்லது பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எப்படியாகினும் ஒரு துறை பொறுப்பில் இருந்து அமைச்சர் விலகியது சிஜேபி கட்சியினருக்கும் நாட்டின் இளைஞர்களுக்கும் மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. எனினும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, போராட்டம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி வலியுறுத்தியுள்ளது. நாம் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து துணிந்து நின்றால் ஜனநாயகம் வெற்றி பெறும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று அப்போதைய காங்கிரஸ் அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலகியுள்ளது வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. Minister Dharmendra Pradhan resigns: A first in the history of the Modi governmentவைரல் விடியோ! மும்பை போராட்டத்தில் போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் யார்?