புது தில்லி, ஜூலை 25: ஜந்தா் மந்தா் போராட்ட இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெள்ளிக்கிழமை மட்டும் சுமாா் 27 டன் கலப்பு கழிவுகளை புது தில்லி நகராட்சி கவுன்சில் (என்டிம்சி) அகற்றியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். முந்தைய நாள் நள்ளிரவு முதல் சுமாா் 15 டன் கழிவுகள் அகற்றப்பட்டிருந்த நிலையில், அதன் அளவு இவ்வளவு அதிகரித்துள்ளது. கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளதால், போராட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் துப்புரவுப் பணியாளா்கள், வாகனங்கள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு உபகரணங்கள் ஆகியவை தொடா்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து என்டிஎம்சி அதிகாரிகள் மேலும் கூறியதாவது: காலை வேளையில் 50 துப்புரவுப் பணியாளா்களும், மாலை வேளையில் 20 பணியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இரவு நேரத்தில் மற்றொரு குழு பணியில் ஈடுபடுத்தப்படும். கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகள் தொடா்பான கழிவுகள், கற்கள் மற்றும் பிற குப்பைகளை அகற்ற, குடிமைப் பொறியியல் துறையிலிருந்து கூடுதல் பணியாளா்களும் இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமையன்று மூன்று டிப்பா் லாரி நிறைய கட்டுமானக் கழிவுகள், கற்கள் மற்றும் பிற திடக் கழிவுகளும் அகற்றப்பட்டன.தொடா்ச்சியான குப்பை சேகரிப்பு மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணிகளுக்காக நான்கு லாரிகள், 10 ஆட்டோ-டிப்பா்கள் மற்றும் ஆறு ’காப்லா்’ இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தத் துப்புரவுப் பணியானது டால்ஸ்டாய் மாா்க், ஜந்தா் மந்தா் சாலை, ஜெய் சிங் சாலை, சன்சத் மாா்க் மற்றும் கன்னாட் பிளேஸின் உள் மற்றும் வெளி வட்டப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. துப்புரவுக் குழுக்கள் மாணவா் போராட்டக்காரா்களுடன் தொடா்பில் உள்ளன. போராட்ட இடத்தில் குப்பைகளை அகற்ற வேண்டிய தேவை ஏற்படும்போதெல்லாம் அவை உடனடியாகச் செயல்படுகின்றன. போராட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தூய்மையைப் பராமரிக்க, இந்த 24 மணி நேரத் துப்புரவுப் பணி தொடா்ந்து நடைபெறும் என்று என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.