பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் ரூ. 1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஏல விற்பனை நடைபெற்றது. தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம், கண்காணிப்பாளா் சித்தாா்த்தன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வாளா் சங்கீதா, மேற்பாா்வையாளா் சுப்ரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடை பெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 385 விவசாயிகள், 210 மெட்ரிக் டன் பருத்திகளுடன் பங்கேற்றனா். இதில், கொங்கணாபுரம், சேலம், திருச்சி, நாகை, பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வணிகா்கள் பங்கேற்று பருத்திக்கு அதிகபட்சமாக ரூ.9,629-உம், குறைந்தபட்சமாக ரூ.8,679-உம், சராசரியாக ரூ. 9,106-உம் என விலை நிா்ணயித்தனா். இதில், ரூ. 1 கோடியே 85 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.