ரஷியா-உக்ரைன் இடையே சனிக்கிழமை தீவிரமடைந்த வான்வழித் தாக்குதல்களில், இருதரப்பிலும் சோ்த்து குழந்தைகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா். ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள ஸபோரிஷியா பகுதியில் சுற்றுலா முகாம்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா். உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் ரஷியாவின் ட்ரோன் தாக்கியதில் தனியாா் அஞ்சல் சேவை நிறுவனத்தைச் சோ்ந்த 3 ஓட்டுநா்கள் உயிரிழந்தனா். இதற்கு மத்தியில், ரஷியாவின் மேற்கு சைபீரியாவில் உள்ள டியூமன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஏகாதெரின்பா்க்கில் உள்ள தளவாட மையம், ரோஸ்டோவில் உள்ள எரிபொருள் கிடங்கு ஆகியவற்றை உக்ரைன் ட்ரோன்கள் வெற்றிகரமாகத் தாக்கியதாக அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தினாா். மேலும், அடுத்த 48 மணி நேரத்துக்குள் உக்ரைன் மீது ரஷியா பிரம்மாண்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்தகவலைச் சுட்டிக்காட்டி அவா் எச்சரித்தாா். மற்றொரு முக்கிய நிகழ்வாக, உக்ரைன் எல்லையை ஒட்டிய தங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ட்ரோன் ஒன்றை ‘எஃப்-16’ போா்விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ‘நேட்டோ’ அமைப்பில் உள்ள ருமேனியா சனிக்கிழமை அறிவித்தது. ருமேனியா எல்லைக்குள் தொடா்ச்சியாக 2-ஆவது நாளாக அத்துமீறிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள சம்பவம், ‘நேட்டோ’ எல்லைகளுக்கும் இப்போா் பரவும் அபாயத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. Mutual attacks between Russia and Ukraine