இயக்குநர் சீனு ராமசாமி, “திரைத்துறையினரின் நீட் போராட்டத்தின் திசையை திருப்பி விடக்கூடாது” என தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.தில்லி மாணவர்களை ஆதரித்து தமிழ்நாட்டிலும் மாணவர்கள் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில், நேற்று (ஜூலை 23) சில திரைத்துறையினர் தமிழக அரசை விமர்சித்து பேசியிருந்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியிருந்தது. முதல்வர் விஜய் நீட் எதிர்ப்பையும் நீட் விலக்கு ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்குமெனவும் கூறிவருகிறார். ஆனால், சில திரைத்துறையினர் முதல்வருக்கு எதிராகவும் அவரது கடைசி படத்துக்கு எதிராகவும் நீட் போராட்டத்தில் பேசி வருகிறார்கள். இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பேசியிருப்பதாவது: திரைப்படக் கலைஞர்கள் மக்களின் வலியைப் பேசவும், அவர்களின் கனவுகள் நசுக்கப்படுவதைத் தட்டிக் கேட்கவும் பூரணமான தார்மீக உரிமை உண்டு. ஆயினும் கலைஞர்களும் உணர்ச்சிவசப்பட்டு இப்போராட்டத்தின் திசையைத் திருப்பிவிடக்கூடாது என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு சொல்லும் நம்மை வெளிக்காட்டுபவை. அதற்குப் பொருளுண்டு. நீட் தேர்வு என்பது திறமையை அளக்கும் கோல் என்று சொல்வது எளிது. ஆனால், கோடிக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வைக்கும் பயிற்சி மையங்களின் வாசலில் நிற்கக்கூட முடியாத கிராமத்து ஏழை மாணவனின் தவிப்பை யார் புரிந்துகொள்வது? அரசுப் பள்ளி மாணவர்களின் ஒற்றைக் கனவை அந்த வணிக வளாகங்கள் எப்படி நசுக்குகின்றன என்பதை இந்தச் சமயம் யோசிக்க வேண்டும். மருத்துவ இடங்களும் கல்லூரிகளும் பெருகியிருப்பதைக் காட்டிவிட்டு, அது நீட்டின் மகத்துவம் என்று வாதிடுவது யதார்த்தத்தை மறைக்கும் வேலை. மருத்துவக் கட்டமைப்பு வளர்வதும், மருத்துவ இடங்கள் அதிகரிப்பதும் இந்த நாட்டின் கட்டமைப்பும் மக்களின் தேவையும்தானே தவிர, நுழைவுத் தேர்வின் கருணை அல்ல. நீட் இல்லாமலும் இந்த இடங்கள் விரிவுபடுத்தப்பட்ட வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம். அதனால்தான், மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் சந்திரசேகர் அவர்கள் குறிப்பிடுவது போல, கல்வி என்பது மத்திய அரசின் கைப்பிடிக்குள் சுருங்கிவிடக் கூடாது. அது மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது. ஒவ்வொரு மாநிலத்தின் மண்ணுக்கேற்ற கல்வி முறை இருக்கையில் அதை கணக்கில் எடுக்காமல் அந்தந்த மக்களின் துடிப்பும் புரியாமல் மத்தியிலிருந்து திணிக்கப்படும் தேர்வு முறைகள் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரை அசைக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய கருத்து இது.காலத்தால் அழியாதது... முதல்வர் விஜய்யுடனான நினைவுகளைப் பகிர்ந்த ஸ்வாதி! Film fraternity, do not divert the course of the NEET protest: Seenu Ramasamy