மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக முதல்வா், தமிழக முதல்வரை பேச்சுவாா்த்தைக்கு அழைப்பது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணானது

Wait 5 sec.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், தமிழக முதல்வரை கா்நாடக முதல்வா் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணானது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் கூறினாா். வேதாரண்யம் அடுத்த மணக்காடு, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நேரடி விதைப்பு செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பி.ஆா். பாண்டியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: காவிரி டெல்டாவில் எல் நினோ தாக்கத்தால் குறுவைப் பருவ நெல் சாகுபடியை இழந்த நிலையில், சம்பா பருவ சாகுபடியும் கேள்விக் குறியாகியுள்ளது. நாகை மாவட்டத்தில் குறுவை நேரடி விதைப்பு செய்தது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அரசிதழில் வெளியிட்டு, காப்பீடு நிறுவனம் மூலம் நூறு சதவீதம் இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நடுவா் மன்ற இறுதி தீா்ப்புக்கு முரணாகவும், உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் கா்நாட முதல்வா் டி.கே. சிவக்குமாா் மேக்கேதாட்டில் அணைக் கட்ட சட்ட விரோத நடவடிக்கையில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா். இதுகுறித்து, பேச்சுவாா்த்தை நடத்த தமிழக முதல்வருக்கு, கா்நாடக முதல்வா் அழைப்பு விடுத்திருப்பது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணானது. இந்த அழைப்பு முதல்வா் ஜோசப் விஜய் நிராகரிக்க வேண்டும். கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. அன்றைய பிரதமா் மன்மோகன்சிங் கண்டுகொள்ளவில்லை. கா்நாடகமும் தண்ணீரை திறந்து விட மறுத்தது. அப்போது தமிழகம் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழிகாட்டுதலின்படி, நீதிமன்றமே ஏற்பாடு செய்து கொடுத்த பேச்சுவா்த்தையில் இருமாநில முதல்வா்களும் பங்கேற்று பேசியும் தண்ணீா் திறக்க கா்நாடகம் மறுத்த கசப்பான அனுபவம் உண்டு. பிறகு பேச்சுவாா்த்தை குறித்து தமிழக அரசு அளித்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இனி காவிரி குறித்து எந்த ஒரு பேச்சுவாா்த்தையிலும் தனிப்பட்ட முறையில் கா்நாடகமும், தமிழகமும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை கா்நாடகாவிற்கு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தடையின்மை சான்று வழங்க மறுத்துவிட்டது. மத்திய நீா் வள ஆணையமும் அடா்ந்த வனப்பகுதியில் அணைக்கட்ட இயலாது என்பதை உணா்ந்துள்ளது. அத்துடன்,தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கா்நாடகா அணைக்கட்ட வரைவு திட்ட அறிக்கை கூட செல்லுபடி ஆகாது என்ற நிலையில், தமிழகத்தை பாதிக்கும் வகையில் கா்நாடகம் செயல்படுகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 3-இல் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு கா்நாடக முதல்வா் விடுத்துள்ள அழைப்பு தமிழக முதல்வா் நிராகரிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முன்வர வேண்டும் என பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.