எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராக இருக்கும் விஜய் நடித்த படம் வெளியாகியுள்ளது. இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான 'ஜன நாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக தேர்தலுக்கு முன்பே, ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னைகளால் படம் வெளிவர முடியாமல் போனது. தொடர்ந்து இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்போது தணிக்கை வாரியம் ஜன நாயகனுக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்த நிலையில் இந்த திரைப்படம் இன்று (ஜூலை 23) 1,000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல்நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4.30 மணிக்கே ஜன நாயகன் திரையிடப்பட்டது.தமிழகம் முழுவதும் ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டை ரசிகர்களும் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். தற்போதைய முதல்வராக இருக்கும் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் வருத்தமும் அடைவதாகத் தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆர் vs விஜய்முதல்வராக இருக்கும்போது அவர்கள் நடித்த படம் வெளியாவது என்பது அவர்களது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் சிறப்பான, கொண்டாட்டமான தருணம்தான். அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக எம்ஜிஆர் நடித்த 'மீனவ நண்பன்' எனும் திரைப்படம் அவர் முதல்வராக இருந்தபோது 1977ல் வெளியானது. முதல்வர் விஜய்யின் தவெக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் மே மாதம் 10 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய். அவர் பதவியேற்று 2 மாதங்களுக்குப் பிறகு அவர் நடித்த 'ஜனநாயகன்' படம் வெளியாகியுள்ளது. அதேபோல 1977ல் எம்ஜிஆரும் முதல்வராகி 2 மாதங்களுக்குப் பிறகுதான் அவரின் 'மீனவ நண்பன்' படம் திரையரங்குகளில் வெளியானது. எம்ஜிஆரின் மற்றொரு படமும் அவர் முதல்வரான பிறகு ரிலீஸ் ஆகியுள்ளது. அவர் முதல்வராகப் பதவியேற்று 6 மாதங்களில் அவர் நடித்த 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் வெளியானது. இந்த படத்தில் சில பணிகள் முடிக்க வேண்டியிருந்ததால், அவற்றை முடித்துக்கொடுக்க ஆளுநரிடம் எம்ஜிஆர் 10 நாள்கள் அனுமதி கோரியது கூடுதல் தகவல். இந்த 2 படங்களுமே எம்ஜிஆர் முதல்வராவதற்கு வெகு முன்னதாகவே படமாக்கப்பட்டுவிட்டதாகவும் நாட்டில் நெருக்கடி நிலை, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களால் அவரது படம் தாமதமாக ரிலீஸ் ஆனதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல எம்ஜிஆரும் முதல்வரானதற்கு முன்பாகவே தனது படங்கள் மூலமாக அரசியல் பேசினார். 1973 முதலே எம்ஜிஆரின் படங்கள் அரசியல் பேச ஆரம்பித்தன. கட்சி ஆரம்பித்ததால் அவரது 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியாவதற்கு பல அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டன. அந்த படம் வெளியான சமயத்தில் மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. 1973 - 1977 காலகட்டத்தில் மிகப்பெரும் அரசியல் ஆளுமையாக எம்ஜிஆர் உருவெடுத்திருந்தார். அதேபோல விஜய்யும் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது படங்களின் மூலமாக மக்களிடம் அரசியல் பேசினார். அந்த படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. எம்ஜிஆரைப் போலவே, கட்சி ஆரம்பித்ததால் அவரது 'ஜன நாயகன்' படமும் வெளியாக பல சிக்கல்களைச் சந்தித்தது. எம்ஜிஆரின் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' அவருக்கு 136 ஆவது படம். விஜய்க்கு 'ஜனநாயகன்' 69 ஆவது படமாகும். எம்ஜிஆரைத் தவிர ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவும் முதல்வரான பிறகு அவரின் 2 படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இன்று 'ஜன நாயகன்' கடைசி படம் என்பதால் அதன் வெளியீட்டை நடிகர் விஜய் ரசிகர்களும், முதல்வர் ஜோசப் விஜய்யின் தொண்டர்களும் இன்று கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். அமைச்சர்களும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஜன நாயகன் படத்தை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இன்று முதல் 4 நாள்களுக்கு விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் முன்பதிவாகியுள்ளது. அதன்பிறகு படம் எந்த அளவுக்கு திரையிடப்படுகிறது, மக்களால் கொண்டாடப்படுகிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 50 years.. After MGR, a Chief Minister vijay appears as a hero in theatres for jana nayagan movieஜன நாயகன் படம் பார்த்து கண்ணீர்விட்ட அமைச்சர் பர்வேஸ்!