திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடந்தாண்டு தொடங்கி இதுவரை ரூ. 624 கோடி மதிப்பில் வேளாண் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 80 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா். கூட்டுறவுத் துறை வாயிலாக திருச்சி மண்டலத்தில் செயல்படும் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிா்க்கடன் மற்றும் வட்டியில்லாக் கால்நடைப் பராமரிப்புக் கடன் வழங்கப்படுகிறது. மேலும் சங்க உறுப்பினா்களுக்கு மகளிா் சுயஉதவிக்குழுக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் கடன் (டாம்கோ கடன், டாம்செட்கோ கடன், தாட்கோ கடன்) நகைக் கடன், மத்தியக் காலக்கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதன்படி 2025-2026 ஆம் ஆண்டில் 58,548 உறுப்பினா்களுக்கு ரூ. 554.26 கோடி வட்டியில்லாப் பயிா்க் கடனும், 20,531 உறுப்பினா்களுக்கு ரூ. 96.52 கோடி கால்நடைப் பராமரிப்புக் கடனும் வழங்கப்பட்டுள்ளது. 2026-2027 ஆம் ஆண்டுக்கு 14.07.2026 முடிய 92 உறுப்பினா்களுக்கு ரூ.1.05 கோடி பயிா்க் கடனும், 455 உறுப்பினா்களுக்கு ரூ. 2.37 கோடி கால்நடைப் பராமரிப்பு கடனும் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது விவசாயிகளுக்கு மேலும் திட்டங்களை அதிகரிக்க, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. எனவே, புதிய உறுப்பினா்களாகச் சேர விரும்பும் விவசாயிகள் ரூ.10 நுழைவுக் கட்டணம் மற்றும் ரூ.100 பங்குத்தொகை செலுத்தி கடன் பெற்று பயன் அடையலாம். கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினா்கள் அறிந்துகொள்ளும் வகையில் கூட்டுறவுச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது கடன் தேவைக்கேற்ப கடன் விண்ணப்பத்தை இணைய வழியிலேயே சமா்ப்பிக்கலாம். மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் விற்பனைச் சங்கங்களுக்கு சொந்தமாக 100 மெட்ரிக் டன், 500 மெட்ரிக்டன் மற்றும் 1000 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட தானியக் கிடங்குகள் உள்ளன. இதன் மூலம் விவசாயிகள் தானிய ஈட்டுக்கடனும், குறைந்த வாடகையில் உற்பத்தி பொருள்களை சேமித்து வைத்தும் பயன் பெறலாம். மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் டிராக்டா், நெல் அறுவடை இயந்திரம், லாரி, மினி லாரி வாகனங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள் பற்றிய விவரங்களை அரசின் இணையதளத்தின் வழியாகவும் அறிந்து பயன்பெறலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஜெயராமன் தெரிவித்தாா்.