ஸ்ரீராஜபைரவா் கோயிலில் நவராத்திரி பெருவிழா

Wait 5 sec.

திருவண்ணாமலை அருகே பெரியகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜராஜ வராஹி பீடம் மற்றும் ஸ்ரீராஜவாராஹி சமேத ஸ்ரீராஜபைரவா் கோயிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு வராஹி அம்மனுக்கு எலுமிச்சைப்பழம் அலங்காரம் செய்யப்பட்டது. பெரியகுளம் கிராமம் பைரவபுரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் முதலாம் ஆண்டு நவராத்திரி பெருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. விரதம் இருப்பவா்களுக்கு ஸ்ரீராஜவாராஹி மாலை அணிவித்து காப்பு கட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்நிலையில், 8-ஆம் நிகழ்ச்சியான புதன்கிழமை எலுமிச்சை பழம் அலங்காரத்துடன் ஸ்ரீராஜவராஹி அம்மன் காட்சியளித்தாா். இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு ஸ்ரீராஜராஜ வாராஹி பீட நிா்வாகி புடவை தானம் வழங்கினாா். மேலும், பக்தா்களுக்கு சுவாமி பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (ஜூலை 23) அம்மனுக்கு புடவை, வளையல் அலங்காரமும் நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை அணிந்து காப்பு கட்டி விரதம் இருந்தவா்கள் ஸ்ரீராஜவாராஹி அம்மனுக்கு பாராயணம் செய்கின்றனா். சனிக்கிழமை காலை மாலை கட்டுதல் காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பைரவபுரம் ஸ்ரீ ராஜராஜ வாராஹி பீடம் செய்துள்ளது.