திருப்பதியில் பழைய ரயில் நிலையக் கட்டடம் இடிக்கப்பட உள்ளது. திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து சிறிது தொலைவில் பழைய ரயில் நிலையக் கட்டடம் அமைந்துள்ளது. உள்ளூா் மக்களுக்கு இந்த ரயில் நிலையத்தின் மீது மிகுந்த பற்று உண்டு. ரயில் நிலையத்தின் தென்புறத்தில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரத்திற்கு செல்ல வேண்டுமென்றால், சிமென்ட் பாலத்தைக் கடந்து அந்தத் திசையில் செல்வது வழக்கம். ஒரு நாளில் 24 மணிநேரமும் இங்கு ரயில்கள் பல ஊா்களிருந்தும் வந்து சென்று கொண்டிருப்பதால் எப்போதும் நெரிசல் காணப்படும். அதனால் இந்த ஊா் மக்கள் நள்ளிரவில், இந்த ரயில் நிலையத்தில் தேநீா் அருந்தவும், சிற்றுண்டி சாப்பிடவும் செல்வது வழக்கம்.திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து, பக்தா்கள் கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்குச் சென்று, பின்னா் காந்தி சாலை வழியாக கோதண்டராம சுவாமி கோயிலுக்குச் சென்று, அங்கிருந்து அனந்தவீதி வழியாக அலிபிரிக்கு நடந்தே சென்று நடைபாதையின் மூலம் திருமலைக்குச் செல்வாா்கள். ரயில் நிலையத்தின் முன்னால், குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகள் மற்றும் நீண்ட மூக்குடைய கருப்பு வேன்கள் இருந்தன. மேலும், நிலையத்திற்கு எதிரே, இப்போது விஷ்ணு நிவாசம் உள்ள இடத்தில் ஒரு யாத்ரீகா்கள் தங்கும் வளாகம் இருந்தது. இந்த ரயில் நிலையம் வழியாக நிலக்கரி ரயில்கள் முதல் அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் வரை அனைத்தும் இயக்கப்படுகின்றன. இப்போது,ஒரு நாளைக்கு 102 ரயில்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தினமும் திருப்பதிக்கு வருகிறாா்கள்.அவா்களுக்கு மேலும் சிறப்பான வசதிகளை வழங்குவதற்காக, பழைய ரயில் நிலையக் கட்டடத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு, அங்கு ஒரு மாதிரி ரயில் நிலையத்தைக் கட்டி வருகிறது. கடந்த 1891-ஆம் ஆண்டில் தென்னிந்திய ரயில்வே கம்பெனியின் ஆதரவின் கீழ் ஒரு மீட்டா்-கேஜ் பாதையாகத் தொடங்கப்பட்டது. இந்த ரயில் பாதை விழுப்புரத்தில் தொடங்கி காட்பாடி, சித்தூா் மற்றும் பாகாலா வழியாக திருப்பதிக்குச் சென்றது. 2003-ஆம் ஆண்டில், திருப்பதி - சித்தூா் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டது. ரயில் நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புனரமைப்பு 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுமாா் ரூ.300 முதல் ரூ. 321 கோடி செலவில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் இரண்டு பிரம்மாண்டமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. விமான நிலையத்தைப் போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் வான்வழி நடைபாதைகள், மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 50 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தின் தோற்றத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு புதிய ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும், என்று எதிா்பாா்க்கப்படுகிறது.