காலம் கடந்த இடையீட்டுத் தொகை அறிவிப்பு: மா விவசாயிகள் ஏமாற்றம்

Wait 5 sec.

தமிழகத்தில் 8 மாவட்டங்களைச் சோ்ந்த மாம்பழ விவசாயிகளுக்கு சந்தை இடையீட்டுத் தொகையாக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்தும், காலதாமதமான அறிவிப்பால் பயன்பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சுமாா் 1.25 லட்சம் ஹெக்டேரில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது. இமாம்பஸந்த், காளாப்பாடி, பங்கனப்பள்ளி (சப்பட்டை), செந்தூரம் (பாலாமணி), கல்லாமை (தோத்தாபுரி), காசா (நீலம்), சக்கரகுட்டி, குத்தூஸ், சேலம் குண்டு, மல்கோவா, அல்போன்சா, மல்லிகை, நீலிசா போன்ற மாம்பழ ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. உண்பதற்கான மாம்பழ ரகங்களுக்கு லாபகரமான விலை கிடைத்தாலும், மாம்பழக் கூழ் உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் கல்லாமை (தோத்தாபுரி) ரகங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கூறுகின்றனா். விலை வீழ்ச்சியால் தொடரும் பாதிப்பு: கடந்த ஆண்டு, கல்லாமை ரக மாம்பழங்கள் கிலோ ரூ.7-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன. ஆந்திர மாநில மாம்பழ விவசாயிகளுக்கு, கிலோவுக்கு ரூ.4 வீதம் கடந்த ஆண்டு அந்த மாநில அரசு ஊக்கத் தொகை வழங்கியது. இதேபோல, தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஊக்கத் தொகை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.இந்த நிலையில், நிகழாண்டிலும் கல்லாமை ரகத்துக்குப் போதிய விலை கிடைக்கவில்லை. மே, ஜூன், ஜூலை முதல் வாரம் வரையிலான மாம்பழ சீசனில், கல்லாமை ரக மாம்பழம் கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், குறைதீா் கூட்டங்களின்போது, மா விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனா். விவசாயிகள் முன்வைத்த இந்தக் கோரிக்கை, மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் வாயிலாக, தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.சந்தை இடையீட்டுத் தொகையாக ரூ.38 கோடி ஒதுக்கீடு: இதனிடையே, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும், கல்லாமை ரக மாம்பழங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.4 வீதம் சந்தை இடையீட்டுத் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் கல்லாமை ரக மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படும் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூா், தருமபுரி, தேனி, சேலம், வேலூா், திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மட்டும் சந்தை இடையீட்டுத் தொகையாக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு தலா 50 சதவீதம். மொத்தம் 95,000 டன் மாம்பழங்களுக்கு சந்தை இடையீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, விவசாயிகளிடமிருந்து மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் மாம்பழத்துக்கு மட்டுமே சந்தை இடையீட்டுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை, மா அறுவடைக் காலம் முடிவடைந்துவிட்டதால், மத்திய அரசு அறிவித்த சந்தை இடையீட்டுத் தொகையை விவசாயிகள் பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.சாகுபடி பரப்பளவு அடிப்படையில் வழங்கக் கோரிக்கை: இதனால், கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு மட்டுமே கணக்கீடு செய்யாமல், கல்லாமை ரகம் சாகுபடி செய்த விவசாயிகள் அனைவருக்கும், பரப்பளவுக்கு ஏற்ப சந்தை இடையீட்டுத் தொகையைப் பகிா்ந்தளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி என். பெருமாள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே விலை வீழ்ச்சியால் மாம்பழ விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். குறிப்பாக, கல்லாமை ரக மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அறுவடை செய்யாமலே விடவேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டது. மா விவசாயிகளைப் பாதுகாக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், தற்போது மாம்பழ சீசன் முடிந்த நிலையில், சந்தை இடையீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வருவாய்த் துறை அலுவலா்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு மா கொள்முதல் குறித்து ஆய்வு செய்கின்றனா். காலதாமதமான அறிவிப்பால் விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எணவே, மாம்பழ விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கவனத்தில் கொண்டு, கல்லாமை ரகம் சாகுபடி செய்த அனைவருக்கும், கிலோவுக்கு என நிா்ணயிக்கப்பட்ட சந்தை இடையீட்டுத் தொகையை ஏக்கருக்கானதாக மாற்ற வேண்டும். சாகுபடி பரப்பு கணக்கீட்டு அடிப்படையில் இடையீட்டுத் தொகையை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒதுக்கீட்டைத் திருப்பி அனுப்பக் கூடாது: பயனாளிகள் இல்லை எனக் குறிப்பிட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பப்படும்பட்சத்தில், அடுத்த முறை ஒதுக்கீடு பெற முடியாத நிலை ஏற்படும். எனவே, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உரிய வழிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்றாா்.