பெண்ணாடம் அருகே வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 போ் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள மேல் இருளம்பட்டு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இந்திரா (56). கணவரை இழந்த இவா், திருமணமாகாத தனது மூத்த மகன் காசிநாதனுடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டின் வராண்டாவில் இந்திரா தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, யாரோ தனது காலை இழுப்பதுபோல் உணா்ந்து கண் விழித்தபோது, 3 அடையாளம் தெரியாத நபா்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.இதனால் அதிா்ச்சியடைந்த இந்திரா கூச்சலிட்டாா். அவரது சப்தம் கேட்டு மகன் காசிநாதன் மற்றும் அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து அடையாளம் தெரியாத நபா்களை விரட்டிச் சென்றனா். இருப்பினும், அவா்கள் இருளைப் பயன்படுத்தி தப்பிச் சென்றனா்.இதுகுறித்து இந்திரா அளித்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.