கால்பந்து உலகக் கோப்பை 2026ல் ஒரு கோல், அசிஸ்ட்கூட செய்யாத ஸ்பெயின் டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர் (defensive Midfielder) ரோட்ரிக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாறாக, இந்த உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி 8 கோல்கள், 4 அசிஸ்ட். 5 முறை ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தும் தொடர் நாயகனுக்கான இந்த தங்கப் பந்து விருது வழங்கப்படாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நியாயமானதுதானா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது.அதிக கோல்கள் அடித்தவருக்கு தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருது வழங்கப்படுகிறது. அதன்படி 10 கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபேவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. லியோனல் மெஸ்ஸிக்கு தங்கக் காலணி இல்லாவிட்டாலும், தங்கப் பந்து விருது வழங்கியிருக்கலாம். இரண்டுமே வழங்கப்படாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என வென்றது. ஆட்டத்தில் 65 சதவிகித நேரம் பந்தை ஸ்பெயின் தன் வசம் வைத்திருந்தது. ஸ்பெயின் 20 முறை இலக்கை நோக்கி அடிக்க, 117ஆவது நிமிஷம் வரை ஆர்ஜென்டீனா ஒருமுறைகூட இலக்கை நோக்கி அடிக்காமல் இருந்தது. இவைதான் ஆர்ஜென்டீனாவின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. இந்த எண்கள்படி சொல்ல வேண்டுமானால், ஸ்பெயின் அவ்வளவு அற்புதமாக அட்டாக் செய்திருக்கிறது, கோல் அடிக்க விடாமல் தடுத்திருக்கிறது என்றே அர்த்தமாகும். உலகக்கோப்பை முழுவதும் ஸ்பெயின் அணி ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறது. அதில் ரோட்ரியின் பங்கு அதிகமாகவே இருந்திருக்கிறது. ஃபிஃபாவின் பவர் ரேங்கிங் தடுப்பாட்டக்காரர்களில் 8.23 புள்ளிகளுடன் ரோட்ரி முதலிடம் பிடித்துள்ளார்.ரோட்ரி ஒரு டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர். அவரது வேலை கோல் அடிக்க விடாமல் தடுப்பதும், எதிரணியின் வீரர்களைக் கடந்து சக அணியினருக்கு பந்தை பாஸ் செய்வதும்தான். ரோட்ரி அதனைச் சிறப்பாகவே செய்துள்ளார். அதனால்தான் ஃபிஃபா இவரை “மிட்ஃபீல்ட் மாஸ்டர்ஃபுல் - Midfield Masterful” என வர்ணிக்கிறது. தங்கப் பந்து விருது என்பது கோல்கள் எண்ணிக்கையைப் பொருத்தது அல்ல. தொடர் முழுவதும் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படுவது. ஃபிஃபாவின் தொழில்நுட்பக் குழு இந்த விருதினை தேர்ந்தெடுக்கிறது.இந்த உலகக் கோப்பையில் ரோட்ரி 753 முறை பந்தை பாஸ் (Pass) செய்து செய்திருக்கிறார். அதில் 94 சதவிகித துல்லியத்துடன் செய்திருக்கிறார். 910 முறை பந்தைத் தொட்டிருக்கிறார். அழுத்தம் கொடுத்தல், பந்தைத் தடுத்தல், பாஸ் செய்தல் என 1,083 முறை அதில் பங்காற்றி சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் மட்டுமே ரோட்ரி 116 முறை பந்தைத் தொட்டிருந்தார். மாறாக, மெஸ்ஸி 54 முறை மட்டுமே தொட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பையில் ரோட்ரி 26 முறை பந்தை எதிரணி வீரரிடம் இருந்து மீட்டிருந்தார். அதில் 18 முறை முழுமையாக மீட்டிருந்தார். இறுதிப் போட்டியில் நான்கு முறை பந்தை மீட்டிருந்தார். தடுப்பாட்டக்காரராகவும் மிட்ஃபீல்டராகவும் ரோட்ரி தனது வேலையை கச்சிதமாக செய்திருந்தார். இந்த உலகக் கோப்பையில் ரோட்ரி 49 முறை டூயல்ஸை வென்றிருந்தார். அதாவது, பந்து இரு அணியினருக்கும் சாதகமாக இருக்கும்போது யார் பந்தை தன்வசப்படுத்துகிறார்களோ அதற்கு டூயல்ஸ் (Duels) என்று பெயர். அதிலும் ரோட்ரி அதிகமுறை செய்து சாதனை படைத்துள்ளார். தரையில் 38 டூயல்ஸையும் காற்றில் (aerial) 11 முறையும் எதிரணியினரிடம் இருந்து பந்தை தன்வசப்படுத்தினார். உலகக் கோப்பை முழுவதும் ரோட்ரி 83,802 மீட்டர் ஓடி இருக்கிறார். உடல் மற்றும் திறன் ரீதியாக ரோட்ரி அதிகமாகவே உழைத்திருக்கிறார். முன்னதாக, 2024-ல் பேலந்தோர் (Ballon d'Or) விருதையும் ரோட்ரி வென்றிருந்தார். லியோனல் மெஸ்ஸி 26 முறை கோல் அடிக்கும் வாய்ப்பை (Chances) உருவாக்கி இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் அதிக வாய்ப்புகளை உருவாக்கியது மெஸ்ஸிதான். ரோட்ரி 11 வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளார். மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் 28 முறை ட்ரிபிளிங் (Dribbles) செய்து அசத்தியுள்ளார். ட்ரிபிளிங் என்பது எதிரணியினரிடம் இருந்து பந்தை லாவகமாக கடத்திச் செல்வது. இதில் இளம் நட்சத்திரம் லமின் யமாலுக்கே (27) இரண்டாமிடம்தான். ரோட்ரி கோல் அடிக்காவிட்டாலும் அவர் தன்னைச் சுற்றி இருந்த சூழ்நிலையைக் கட்டுக்குள் வைத்திருந்தார். முழுமையான, விளைவு சார்ந்த பாதிப்புகளை மிட்ஃபீல்டிலும் டிஃபென்ஸிலும் ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக மாரடோனா, ஜிடானே ஆகியோரும் அட்டாக்கிங் மிட்ஃபீல்டர்களாக (attacking Midfield) இருந்து இந்த விருதை வாங்கியிருந்தாலும் 2018-ல் முழுமையான சென்ட்ரல் (central midfield) மிட்ஃபீல்டரான லூக்கா மாட்ரிச்சுக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த முறை டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர்கள் வரிசையில் ரோட்ரிக்கு முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது.இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி ஐந்து முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். ஆனால், ஒரே ஒரு முறை மட்டுமே ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்; என்றால் ரோட்ரி தங்கப் பந்து விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது சரிதானா என்றால், விடை சர்ச்சைக்குரியதுதான். ஆனால், அணி கோப்பை வெல்லாத நிலையில், அந்த அணியிலுள்ள மெஸ்ஸிக்குப் பிறகு, கோப்பை வென்ற அணியில் சிறந்த வீரரான ரோட்ரிக்கு அந்த விருது அளித்ததில் தவறில்லை என்றுதான் கூற வேண்டும்.இருக்கட்டும், விருது என்றாலே எப்போதும் சர்ச்சைதானே.ஃபிஃபாவின் படைப்புத் திறன் விருது: 0.3 புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்த மெஸ்ஸி!Messi snubbed? Is the Golden Ball award fair for Rodri, who didn't score a single goal or provide an assist?- analysis