மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சரின் பதிலுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகம் - தமிழ்நாடு இடையேயான பிரச்னை தீவிரம் அடைத்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் மத்திய நீர்வளத்துறையின் இணை அமைச்சர் ராஜ் பூசண் சௌதரி, “காவிரி நீர் தொடர்பான பிரச்னை பற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப். 16-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அந்தத் தீர்ப்பில், காவிரி நீர் தீர்ப்பாயம் 2007-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு பொருத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் ராஜ் பூசணின் பேச்ச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப். 16-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்" என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காவிரி நதிநீர் தமிழ் நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எனது (எடப்பாடி பழனிசாமி) தலைமையிலான அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று காவிரி நதிநீர் தொடர்பான போற்றத்தக்க இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அழுத்தம் காரணமாகமத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன்படி தமிழ் நாட்டிற்குரிய பங்கு நீர் பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கத் தவறியதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், (ப.எண்.342) ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது' எனத் தெரிவித்துள்ளது.மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வலியுறுத்தினேன். மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன். தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகத் தெளிவாக "காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்பு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.AIADMK General Secretary Edappadi Palaniswami has condemned the response given by the Union Minister of State in Parliament regarding the Mekedatu dam issue.