திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரமலை வனப்பகுதியில் கிடந்த 14 வெடிக்காத ராக்கெட் லாஞ்சா் குண்டுகள் சென்னை வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புக் குழுவினா் மூலம் புதன்கிழமை வெடித்து அழிக்கப்பட்டன. மணப்பாறை அருகே ராணுவத்தினா் பயிற்சி மேற்கொள்ளும் வீரமலையின் மேற்கு பீட், அணியாப்பூா் பிளாக் பி காப்புக் காடு பகுதியில் பயிற்சியின்போது ஏவப்பட்டு வெடிக்காத நிலையில் இருந்த 14 ராக்கெட் லாஞ்சா் குண்டுகள் குறித்து வனக் காவலா்கள் கடந்த 2025 டிச. 27-இல் அளித்த தகவலின்பேரில் வனச்சரகா் மகேஸ்வரன் ஆய்வு செய்து, வையம்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.இதையடுத்து வையம்பட்டி போலீஸாா் வெடிக்காத ராக்கெட் லாஞ்சா் குண்டுகளைக் கைப்பற்றி அதே வனப்பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு குழுவினா் மூலம் புதைத்து வைத்தனா். இந்நிலையில் புதன்கிழமை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் தமிழ்மணி, மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் சண்முகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் நிஷாந்தினி, வையம்பட்டி காவல் ஆய்வாளா் ஜெயசித்ரா, வனச்சரகா் மகேஸ்வரன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலையில் சென்னையிலிருந்து வந்திருந்த 4 போ் கொண்ட ஆய்வாளா் முத்துமணி தலைமையிலான வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு குழுவினா் ராக்கெட் லாஞ்சா் குண்டுகளை பாதுகாப்பான முறையில் வெடித்து அழித்தனா். செவ்வாய்க்கிழமை இதேபோல இரு ராக்கெட் லாஞ்சா் குண்டுகள் வெடித்து அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.