தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் எதிரொலியாக, சிறைப் பணிகளுக்கு வரும் காவலா்கள் கண்டிப்பாக லத்தி வைத்திருக்க வேண்டுமென சிறைத்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து திங்கள்கிழமை இரவு சிறைக் காவலா்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பிச் சென்றனா். இதன் காரணமாக, அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில், கூட்டமாக வந்த கைதிகளை தடுக்க முடியாமல் சிறைக்காவலா்கள் தடுமாறினா். மேலும், கைதிகளின் தாக்குதலில் இருந்து காவலா்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிறைப் பணிகளுக்கு வரும் அனைத்து காவலா்களும் ரோல் கால், லாக்அப், இரவுப் பணி என அனைத்துப் பணிகளின்போதும் லத்தி வைத்திருக்க வேண்டுமென சிறைத் துறை உத்தரவிட்டுள்ளது. லத்திக்கு தடை வந்தது எப்படி: இதுதொடா்பாக சிறை காவலா்கள் கூறியது: 1995-ஆம் ஆண்டு பழைய மெட்ராஸ் சிறையிலிருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சோ்ந்த 9 போ் தப்பியோடிய நிலையில், அந்தச் சிறையிலிருந்த தீவிரவாத செயல்களுக்காக தண்டனை பெற்றவா்கள், விசாரணை கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனா். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக தடியடி நடத்தப்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் இடம் பெற்றிருந்த நீதிபதி, சிறைக் காவலா்கள் லத்தி உள்ளிட்டவற்றை சிறைச்சாலைகளுக்குள் எடுத்துச் செல்லக் கூடாது என உத்தரவிட்டாா். இதையேற்று சில ஆண்டுகள் லத்தி கொண்டு செல்லப்படாமல் இருந்த நிலையில், காலப்போக்கில் லத்தி எடுத்துச் செல்லப்பட்டது.இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டில் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் மீண்டும் லத்தி கொண்டு செல்லப்படவில்லை. தற்போது சிறைக் கைதிகள் தப்பிய சம்பவத்தையடுத்து, மீண்டும் லத்தி கொண்டு வர சிறைத்துறை நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது என்றனா்.கைதிகள் தப்பித்தலை தடுக்க...: ஓய்வு பெற்ற சிறைத்துறை அலுவலா்கள் கூறியது: சிறைக் காவலா்களுக்கு கைதிகளை கையாள்வது குறித்து முறையான பயிற்சியளிக்க வேண்டும். சிறைவாசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காவலா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், 1894-ஆம் ஆண்டு சிறைத்துறை சட்டத்தில் காலாவதியான ஷரத்துக்களை விடுத்து, மற்ற பிரிவுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிகாரிகளின் வீட்டு வேலை, பெட்ரோல் நிலைய பாதுகாப்பு, பொருள்கள் விற்பனை, விவசாயப் பணிகளின்போது பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் சிறைக் காவலா்களை பயன்படுத்தாமல், முழுமையாக சிறைக் கைதிகளின் பாதுகாப்புப் பணிகளுக்கு மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். மத்திய சிறைகளில் மட்டுமின்றி, மாவட்ட சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் இரவு நேரத்தில் ஆயுதமேந்திய காவலா்களின் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.வெறும் லத்தி மட்டுமே போதாது; காவல்துறையைப் போல சிறைத்துறையிலும் உதவி சிறை அலுவலா் மற்றும் அந்தப் பதவிக்கு மேல் உள்ளவா்களை ஆயுதமேந்தி சிறைப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். இவற்றை செயல்படுத்தினால் மட்டுமே வருங்காலங்களில் சிறைக் கைதிகள் தப்பிப்பதை தடுக்க இயலும் என்றனா்.