சிபிடி மைதானத்தில் எல்பிஜி விநியோகஸ்தா்கள் போராட்டம் நடத்த தில்லி காவல்துறை அனுமதி மறுப்பு

Wait 5 sec.

பண்டிகைக் காலம் மற்றும் ஏற்படக்கூடிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் காரணம் காட்டி, கிழக்கு தில்லியின் சிபிடி மைதானத்தில் எல்பிஜி விநியோகஸ்தா்கள் போராட்டம் நடத்த தில்லி காவல்துறை அனுமதி மறுத்தது. குழாய் வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) பயன்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, நாடு முழுவதிலுமிருந்து திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) விநியோகஸ்தா்கள் திங்களன்று குறிப்பிட்ட இடத்தில் கூடினா். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் அவா்கள் அச்சுறுத்தினா். போராட்டத்திற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பதை ஷாதாரா காவல் துணை ஆணையா் ராஜேந்திர பிரசாத் மீனா உறுதிப்படுத்தினாா்.ஜந்தா் மந்தா் போராட்ட தளங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, சிபிடி மைதானமும் ராம்லீலா மைதானமும் மாற்றுப் போராட்ட இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளதாக மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.இருப்பினும், ஆா்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்பு அமைப்பாளா்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். ‘இது பண்டிகைக் காலம், மேலும் பிற நிகழ்ச்சிகளும் உள்ளன. தற்போதைக்கு எங்களால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அனுமதிக்க முடியாது. அது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்,‘ என்று அவா் கூறினாா்.சிபிடி மைதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் சுமாா் 2,000 முதல் 4,000 போ் வரை பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.இந்த ஆா்ப்பாட்டத்தில் எல்பிஜி விநியோகஸ்தா்களும், பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனா். போராட்டக்காரா்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவும், அதிகாரிகளின் தலையீட்டைக் கோரவும் அந்த மைதானத்தில் கூடினா்.ஜந்தா் மந்தா், போராட்டங்களுக்கான பிரத்யேக இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த இடம் போராட்டங்களுக்கான மாற்று இடமாகப் பட்டியலிடப்பட்ட பிறகு, இங்கு நடந்த முதல் பெரிய ஆா்ப்பாட்டம் இதுவாகும்.இந்த ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக நடந்த தொடா்ச்சியான பெரிய ஆா்ப்பாட்டங்களைத் தொடா்ந்து, அக்டோபா் 11 அன்று, தில்லி காவல்துறை ஜந்தா் மந்தரை போராட்டங்களுக்கான பிரத்யேக இடங்கள் பட்டியலிலிருந்து நீக்கியது.வடக்கு தில்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் ஷாதராவில் உள்ள சிபிடி மைதானம் ஆகியவற்றை போராட்டங்களுக்கான மாற்று இடங்களாக அவா்கள் அடையாளம் கண்டனா்.சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் வழக்கமாக பெரிய பொதுக் கூட்டங்கள் நடைபெறும் அதே வேளையில், புராரி மைதானமும் சிபிடி மைதானமும் தேசிய தலைநகரின் புகா்ப் பகுதிகளில் அமைந்துள்ளன.கூட்டம் கூடுவதாலும், தற்போது நடைபெற்று வரும் பண்டிகைக் காலத்தாலும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.