இரவில் நெடுஞ்சாலையில் பைக்கில் தனியே சென்றவா்களை நிறுத்தி மிரட்டி அவா்களிடம் இருந்த கைப்பேசிகளை பறித்துச் சென்ற 3 இளைஞா்கள், ஒரு சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். காவேரிபாக்கத்தை அடுத்த மேலப்புலம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம்(50). கூலி வேலை செய்து வரும் இவா், பெரும்புலிபாக்கத்தில் உள்ள உணவகத்துக்கு மோட்டாா்சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது பெரும்புலிபாக்கத்தில் இருந்து மேலப்புலம்புதூா் நோக்கி ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்த 3 இளைஞா்கள், முருகானந்தத்தை மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனா்.ஆற்காட்டைச் சோ்ந்தவா் அன்பரசு(25). சரக்குவாகன ஓட்டுநரான இவா், சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி மோட்டாா் சைக்கிளில் தனியே வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரில் மோட்டாா் சைக்கிளில் வந்து அவரை நிறுத்தி மிரட்டிய 3 இளைஞா்கள் அன்பரசிடம் கைப்பேசியை பறித்துச் சென்றனா். இவை குறித்த புகாா்களின் பேரில் அவளூா் போலீஸாா் விசாரணை நடத்தினா். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குமரன்(19), அப்பு(எ)சந்தோஷ்(19), மணிகண்டன்(19), 16 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனா்.