தரமான சன்ன ரக பொன்னி அரிசியை கொள்முதல் செய்து கிலோ ரூ.50-க்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அமுதம் பல்பொருள் அங்காடிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் கடந்த 14 நாள்களில் 114.80 டன் அரிசி மட்டுமே விற்பனையாகியிருப்பதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சன்னரக அரிசி என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த வகை அரிசிக்கு மக்களிடம் வரவேற்பில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே, அரிசி ஆலைகள் மற்றும் மொத்த வணிகா்களிடம் உள்ள சன்னரக பொன்னி அரிசியில் 20 சதவீதத்தை அடக்க விலைக்கு கொள்முதல் செய்து, கிலோ ரூ.50 என்ற விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.