இந்தியாவின் நகரங்கள், பேரூர்கள், கிராமங்கள் வரை கழிவு மேலாண்மை ஒரு மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. குப்பைகளை ஆங்காங்கே வீசுவது, அகற்றப்படாத குப்பைக் குவியல்கள் மற்றும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமை போன்ற சிக்கல்கள், ஒட்டு மொத்த இந்தியாவைப் பெரும் கவலைக்குள் தள்ளியுள்ளது.இத்தகைய சூழலில், ஒடிஸா மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பிசோய் வட்டாரத்தில் உள்ள 'போபெய்ஜோதா' கிராமம் தனித்து விளங்குகிறது. இந்தியாவுக்கு முன்மாதிரியாக நிற்கிறது. தினமும் மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை மூன்று முறை கூட்டிப் பெருக்குகிறார்கள். அதனால் முழு கிராமமே துடைத்து வைத்தது போல மின்னுகிறது. தூய்மையின் காரணமாக, 'போபெய்ஜோதா' இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுசூதன் மராண்டி என்ற ஆசிரியரால் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'கிராமத்தை தூய்மையாக வைக்க மக்கள் பங்கேற்பு முயற்சி', இன்றைக்கும் ஒரு வாழ்க்கை முறையாக கிராமவாசிகளால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 'கிராமம்தான் சுத்தமாக இருக்கிறதே... நாளை பெருக்கிக் கொள்ளலாம்' என்று யாரும் சோர்ந்து இருந்துவிடுவதில்லை. கிராமத்தை தினமும் மூன்றுமுறை கூட்டிப் பெருக்குவதில் கடந்து 15 ஆண்டுகளில் யாருக்கும் அலுப்பு, சோம்பல் வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்!சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், தூய்மை என்பது வெறும் விதிமுறை மட்டுமல்ல; மக்களின் அன்றாட வாழ்க்கை முறையின் ஓர்அங்கமாக மாறியுள்ளது. தூய்மையான வீதிகள் அனைவரையும் கவரும் அம்சமாக மாறியுள்ளன.கிராமம் முழுவதும் வீதிகள் மிகவும் தூய்மையாக உள்ளன. குப்பைகளோ அல்லது பிளாஸ்டிக் கழிவுகளோ எங்கும் காணப்படுவதில்லை. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அனுமதி இல்லை. கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, மட்கும் கழிவுகள் உரமாக மாற்றப்படுகின்றன. குப்பைகளை வீசுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இங்கு புகைபிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், எச்சில் துப்புவதற்கும், புகையிலை மெல்லுவதற்கும் அனுமதி இல்லை. பார்வையாளர்களும் இந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.மக்கள் அனைவரும் தூய்மையில் மிகுந்த அக்கறை கொண்டு, தங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதில் தீவிரமாகப் பங்கேற்பதன் விளைவே இந்தத் தூய்மையான சூழல்.இங்கு குப்பைத் தொட்டிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளில் சுவர்களில் அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தூய்மையைப் பேணுவது மக்களின் இயல்பான பழக்கமாகவே மாறிவிட்டதால், இந்த கிராமத்தின் தூய்மையைக் கண்டு வியக்கவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். குப்பைகளை வீசும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும். 'படா பர்வா' திருவிழாக் காலத்தில், இந்தக் கிராமம் இன்னும் பொலிவுடனும் வரவேற்பு உணர்வுடனும் காட்சியளிக்கிறது. திருவிழாவின் போது, களிமண் மற்றும் வைக்கோலால் ஆன வீடுகள் இயற்கையான வண்ணங்களால் அழகாக அலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் முற்றங்கள் முதல் தெருக்கள் வரை அனைத்தும் தூய்மையால் ஜொலிக்கின்றன. கிராமம் முழுவதும் தோரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது.'மராண்டி அவர்கள் முன்னெடுத்த சிந்தனையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறோம்; தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பேணும் இந்த மரபைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்' என்கிறார்கள் 'போபெய்ஜோதா' கிராம மக்கள்.