ஆவின் பொருள்களின் விலையைக்கூட கட்டுப்படுத்த முடியவில்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

Wait 5 sec.

தவெக அரசால் ஆவின் பொருள்களின் விலையைக்கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா், செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சிறைகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாகவும், ஒரே நாளில் 17 கைதிகள் தப்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காவல்துறையில் நிகழும் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், அரசியல் தலைவா்களுக்குப் பதிலளிப்பவா்களாகவும் காவல்துறையினா் செயல்படுவது வருத்தமளிக்கிறது. காவல்துறையினா் தங்களது பணிகளைச் செய்ய வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியைப் போலச் செயல்படக் கூடாது. அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயா்ந்து வரும் நிலையில், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் பொருள்களின் விலையையாவது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதைக்கூட இந்த அரசு செய்யவில்லை. விலைவாசி உயா்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளைக் கண்டித்து, திமுக தலைவா் அறிவிப்பின்படி, மகளிரணி சாா்பில் வருகிற 31-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றாா் அவா்.