வாடிக்கையாளர்களின் பணம்தான் திருடப்படும், புகார் வரும், ஆனால் இங்கு சென்ட்ரல் வங்கியிலேயே 187 பரிவர்த்னைகள் மூலும் ரூ.14 கோடி திருடப்பட்டிருக்கும் சம்பவம், ரிசர்வ் வங்கியின் உள்கட்டமைப்பே ஊருடுவப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.நிதிச் செய்தி பரிமாற்ற முறை மூலம் அடையாளம் தெரியாத ஹேக்கர்கள் வங்கிப் பணம் ரூ.13.97 கோடியைக் கொள்ளையடித்ததாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆங்கில ஊடகத்தில் வெளியாகியிருக்கும் செய்தியின்படி, அக். 15 - 17ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்த தனது தீர்வு கணக்கிலிருந்து 187 அங்கீகரிக்கப்படாத பணப்பரிமாற்றங்கள் மூலம் 13.97 கோடி ரூபாய் எடுக்கப்பட்டதாக, சென்ட்ரல் வங்கி, மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.இந்த புகாரில், சென்டிரல் வங்கி கூறியிருக்கும் முக்கிய தகவல் என்னவென்றால், அடையாளம் தெரியாத நபர்கள், வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தும் 'ஸ்ட்ரக்சர்டு ஃபைனான்சியல் மெசேஜிங் சிஸ்டம்' (SFMS) எனும் மையச் சேவையகத்தை (சர்வர்) அணுகி இந்த மோசடியை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.அதாவது, ஆர்டிஜிஎஸ் (RTGS) நடைமுறையின்படி, ஒரு வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட பின்னரே, வங்கியின் எஸ்எஃப்எம்எஸ் (SFMS) சர்வர் வழியாக, இந்திய நிதித் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் அமைப்பால் இயக்கப்படும் மைய சர்வருக்கு பணப் பரிமாற்றச் செய்தி அனுப்பப்படும். சென்டிரல் வங்கியில் நடந்த மோசடியில், அடையாளம் தெரியாத நபர்கள், வங்கியின் எஸ்எஃப்எம்எஸ் சர்வர் வழியாக ஐஎஃப்டிஏஎஸ்-ன் மைய சர்வருக்குள் அனுமதியின்றி நுழைந்து, பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் 6 முதல் 93 பணப்பரிமாற்றங்கள் வரை மூன்று நாள்கள் 187 பணப்பரிவர்த்தனைகள் மூலம் பல்வேறு நபர்களுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் காட்டப்பட்டாலும், அவற்றுக்கு இணையான பரிவர்த்தனை அடையாள எண்கள் (transaction IDs) வங்கியின் ஆவணங்களில் பதிவாகவில்லையாம். மேலும், பணம் செலுத்தியவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள கணக்குகள் சென்ட்ரல் வங்கிக்குத் தொடர்புடையவை இல்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால்தான் இந்த 187 பணப் பரிமாற்றங்களை வங்கியின் உள் குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை, காவல்துறைக்கு புகார் வந்துள்ளது என்று கூறப்படுகிறது.அதேவேளையில், ஆர்பிஐ உள்கட்டமைப்பில் எந்த சமரசமும் இல்லை, வங்கித் தொடர்புகள் பாதுகாப்பாக நம்பகமானவையாக உள்ளது, வாடிக்கையாளர்களின் பணம் திருடப்படவில்லை என்றும் வங்கி நிர்வாகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.இதுநாள்வரை வங்கி வாடிக்கையாளர்களின் பணம் திருடப்படும், வங்கியிடம் புகார் அளிப்பார்கள், தற்போது வங்கிப் பணமே திருடப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, கடந்த வாரம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு டார்க் வெப் பக்கங்களில் அனைத்தும் வெளியிடப்பட்டிருந்தது. இன்று வங்கிப் பணம் திருடப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு என்ன? இனி வங்கிகளில் மக்கள் பணம், விவரம் பாதுகாப்பாக இருக்கும் என எவ்வாறு நம்புவது என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். What happened at the Central Bank of India? Rs. 14 crore gone, 187 transactions! Who committed the theft?