பெருவாழ்விற்கு உதவும் 16 செல்வங்கள் - முனைவர் பெருங்குளம் கே.ஆர்.பி. மணிமொழிச்செல்வன்; பக்.168; ரூ.220; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044- 2434 2926.'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பார்கள்; அது போன்ற நல்லதொரு குடும்பத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை. இதனால்தான் திருமணத்தின்போது '16 செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்' என்று பெரியோர் மணமக்களை வாழ்த்துவார்கள். அந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன?, அவற்றை வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிப்பது?, அவற்றைக் கடைப்பிடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கே.ஆர்.பி. மணிமொழியனின் மூத்த மகனான நூலாசிரியர் சிறப்பாக எழுதியுள்ளார்.புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல் விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இனிமை, துணிவு, நோயின்மை, நீண்ட ஆயுள் என்ற அந்த 16 செல்வங்களின் அவசியமும், அவற்றை எவ்வாறு வாழ்க்கையில் பயன்படுத்துவது, முன்னேறுவது என்பதையெல்லாம் எளிய நடையில் சுவாரஸ்யமாக சாமானியருக்கும் புரியும் வகையில் நூலாசிரியர் அளித்துள்ளார். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அனுபவம், பயிற்சி, முயற்சி, போராட்டங்கள், இன்ப-துன்பங்கள், சுகமான சுமைகளை சந்தித்து சாமானிய மனிதர்கள் சாதனையாளராக மாறுவதற்கான வழிகாட்டுதல் இந்த நூலில் உள்ளன.நூலைப் படித்துப் பார்க்கும்போது நூலாசிரியரின் எழுத்து நடையும், அனுபவ அறிவும் அவரது பிற நூல்களை வாசிக்கத் தூண்டுகிறது.ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் என்பதுடன், இளம் தம்பதியினருக்கு பரிசளிக்க உகந்த நூல்.