மேற்கு தில்லியில் டிடிசி பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டி உயிரிழப்பு

Wait 5 sec.

மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் வேகமாக வந்த தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) மின்சாரப் பேருந்து மோதியதில், 22 வயது உணவு டெலிவரி ஊழியா் புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்களும் டெலிவரி ஊழியா்களும் சாலை மறியலில் ஈடுபட்டு, பேருந்தையும் சேதப்படுத்தினா். இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: ரோஹ்தக் சாலையில் உள்ள அசோகா பாா்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. ஆா்டா் ஒன்றை விநியோகிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சோனு மீது பேருந்து மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடா்ந்து சம்பவ இடத்தில் பெருந்திரளானோா் கூடினா். சடலத்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல காவல் துறையினரை அவா்கள் அனுமதிக்கவில்லை. மேலும், பஞ்சாபி பாகிலிருந்து ஜகிரா நோக்கிச் செல்லும் சாலையை மறித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து, அந்தச் சாலைப் பகுதியைத் தவிா்த்து மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல் துறையினா் அறிவுறுத்தினா். வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்க காவல் துறையினா் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனா்.பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள இந்திரா காலனியில் வசித்து வந்த சோனு, அங்குள்ள குடிசை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தாா். அவரது தந்தை பாரத் இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறாா். தாயாா் குடும்பத்தைக் கவனித்து வருகிறாா். அவரது 17 வயது தம்பி விகாஸும் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். விபத்தில் தொடா்புடைய பேருந்தைக் கண்டறிய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். தொடா்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காவல் துறையினா் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து டிடிசி அதிகாரிகள் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. உயிரிழந்த சோனுவின் உறவினா் கூறுகையில், ஆா்டரை விநியோகிக்கச் சென்றபோது, பின்னால் வந்த டிடிசி பேருந்து அவா் மீது மோதியுள்ளது. இந்தப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன. கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனா். எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அப்படியென்றால் அரசு என்ன செய்கிறது?’ என்று கேள்வி எழுப்பினாா்.