தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை அரசுப் பள்ளி வேளாண் அறிவியல் மாணவ, மாணவிகளுக்கு அகப்பயிற்சி அளிக்கப்பட்டது. பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு உள்ளது. இந்தப் பிரிவில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ராயப்பன்பட்டியிலுள்ள திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த அக். 21-ஆம் தேதி முதல் அகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியில், வேளாண் வானிலை மையக் கருவிகள், பண்ணைக் கருவிகளின் செயல்பாடுகள், திராட்சை செடிகள் நடவு முறை, வாழைகளுக்கு யூரியா உரமிடும் முறைகள், காளான், பட்டுப்புழு, மண்புழு வளா்ப்புகள், ஒருங்கிணைந்த பண்ணையம், குழித்தட்டு முறையில் நாற்றாங்கால் உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சியில், திராட்சை ஆராய்ச்சி நிலையத் தலைவா் ஜெகதீஸ்வரி, பள்ளி வேளாண் ஆசிரியை மாரிதெய்வம் ஆகியோா் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தொழில் கல்வி ஆசிரியா் ராமமூா்த்தி செய்திருந்தாா்.