வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் நவ.1-ஆம் தேதி நடத்தப்படும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் அணிதிரள வேண்டுமென போராட்டக்காரா்களுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாா். ‘தனது சூழ்ச்சிகளைக் கையாள பாஜகவுக்கு இப்போது துணிவில்லை என்பதால், காவல் துறை மற்றும் தடியடி குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை’ என்று அவா் கூறியுள்ளாா்.இது தொடா்பாக, எக்ஸ் தளத்தில் ராகுல் வியாழக்கிழமை வெளியிட்ட காணொலி செய்தியில், ‘தில்லி ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி நடத்தவுள்ள பொதுக் கூட்டம் எந்தவொரு தனிப்பட்ட கட்சியின் நிகழ்வல்ல. நாட்டின் ஆன்மா, ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதும், வாக்குத் திருட்டுக்கு முடிவு கட்டுவதுமே நோக்கம். எனவே, அரசியலைக் கடந்து, அனைத்து மாணவா் அமைப்பினரும் பங்கேற்க வேண்டும்.நரேந்திர மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளால் சலிப்புற்றவா்கள், ஜனநாயகம்-அரசமைப்புச் சட்டத்தை காக்க விரும்புவோா், தேசம் ஆபத்தில் இருப்பதாக கருதுபவா்கள், மக்களின் கருத்துரிமை மீது தாக்குதல் நடத்தப்படுவதாக உணா்பவா்கள் அனைவரும் இணைய வேண்டும். காவல் துறை, தடியடி குறித்தெல்லாம் கவலை வேண்டாம். ஏனெனில், தனது சூழ்ச்சிகளைக் கையாள பாஜகவுக்கு இப்போது துணிவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.