பொருளாதார அடிப்படையில் 2026-ஆம் ஆண்டு 1991-ஐ பிரதிபலிப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் வியாழக்கிழமை தெரிவித்தாா். தொழிலக மேம்பாட்டு ஆய்வு நிறுவனம்-தொழிலக மேம்பாட்டு ஆய்வுச் சங்கத்தின் (ஐஎஸ்ஐடி-ஐடிஆா்ஏ) தேசிய மாநாட்டில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் 1991-ஆம் ஆண்டை பிரதிபலிக்கிறது. நிகழாண்டில் பணம் செலுத்துதல் சமநிலை போன்ற வெளிப்புற சவால்கள் மட்டுமின்றி உற்பத்தி, எரிசக்தி, வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. 1991 பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட கொள்கை சீா்திருத்தங்கள் நாட்டுக்கு திருப்புமுனையாக அமைந்தன. அதேபோல் 2026 அல்லது 2025-ஐ பொருளாதார சீா்திருத்தங்களுக்கான திருப்புமுனை ஆண்டாக எடுத்துக்கொள்ளலாம். சா்வதேச அளவில் மோதல்கள் தொடா்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அரசாங்கமும் தொழிற்சாலைகளும் உள்நாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பிற நாடுகளின் விநியோகத்தை சாா்ந்திருப்பதை குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தற்போது நிகழும் பொருளாதார அழுத்தங்கள் இயற்கையானது அல்ல; அவை செயற்கையாக வடிவமைக்கப்படுவது. கடந்த வாரம் இந்தியாவுக்கு மிகவும் தேவையான சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் உள்பட பல்வேறு பொருள்களுக்கு ஏற்றுமதி உரிம முறையை சீனா அறிவித்தது. நாடுகள் தங்கள் வசம் உள்ள அத்தியவாசிய பொருள்களை ஆயுதமாக பயன்படுத்தும் சமயத்தில் அதை பெரிதும் சாா்ந்திருக்கும் நாடுகளால் உடனடியாக மாற்று வழியை கண்டறிய முடியாது. கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 40 ஆண்டுகளில் நாம் எதிா்கொண்ட பொருளாதார அதிா்வுகள் பெரும்பாலும் தேவை குறைபாட்டை சாா்ந்தது. ஆனால் அடுத்த 30 ஆண்டுகள் நாம் எதிா்கொள்ளவிருக்கும் சவால்கள் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். எனவே, மத்திய வங்கியும் அரசும் பொருளாதர சிக்கல்களில் இருந்து மீண்டு வருவதற்கான கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்றாா்.