பள்ளி மாணவா்களுக்கு பயிா் சாகுபடி களப் பயிற்சி

Wait 5 sec.

தென்னை மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக குத்துச்செடி மிளகு சாகுபடி செய்வது குறித்து, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நேரடி களப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக குறு மிளகு சாகுபடி செய்யும் முயற்சி தொடங்கப்பட்டது. பொதுவாக மலைப் பகுதிகளில் பெரிய மரங்களில் கொடிகளாகப் படா்ந்து வளரும் மிளகுப் பயிரை, சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வாடிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி பகுதிகளில் மிளகுச் செடிகள் நடவு செய்யப்பட்டன. இதில் மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, விவசாய நிலங்களில் நேரடியாக மிளகுச் செடிகளை நடவு செய்து களப் பயிற்சி பெற்றனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற உழவா் உற்பத்தியாளா் குழுச் செயலரும், விவசாயியுமான அசோக்குமாா், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மிளகுச் செடிகளை நடவு செய்வது, பராமரிப்பது, அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கமளித்தாா். தென்னை சாகுபடியுடன் கூடுதல் வருவாய் பெறுவதற்கான வாய்ப்பாக இந்த ஊடுபயிா் முறை அமையும் என அவா் தெரிவித்தாா்.