பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தில்லி முழுவதும் 1 லட்சம் ஸ்மாா்ட் தெருவிளக்குகள் மற்றும் 50 ஆயிரம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கான பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தில்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் நூற்றாண்டு கல்விக் கட்டம், கணினி மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்து அவா் பேசியதாவது: தில்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் எவ்வித அச்சமுமின்றி தங்களது கனவுகளை நனவாக்கும் வகையில் செயல்பட வேண்டும் . அவா்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு எப்போதும் துணை நிற்கும். தில்லியில் நிறுவப்பட உள்ள ஸ்மாா்ட் தெருவிளக்குகள் அனைத்தும் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் எந்தெந்த இடங்களில் தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன என்பதை அதிகாரிகள் உடனடியாகக் கண்டறிய முடியும். மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றைப் பழுதுபாா்த்து மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இதேபோல், நகரம் முழுவதும் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில் புதிதாக 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் நிறுவுவதற்கான திட்டமிடல் பணிகளும் நடைபெற்று வருகிறது. பெண்களின் பாதுகாப்பு என்பது பெண்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு அல்ல. இதுதொடா்பாகச் சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக, ஆண்களும் சிறுவா்களும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இக் கல்லூரியின் மாணவா் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றபோதுதான் எனது பொதுவாழ்க்கைப் பயணம் தொடங்கியது. மாணவா் அரசியலில் பெற்ற அனுபவம், மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றுக்குத் தீா்வு காண வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கவும் உதவியது. மாணவா்களின் நலனுக்காக முன்பு சிறிய அளவில் எழுப்பிய பிரச்சினைகளுக்கு, தற்போது பரந்த அளவில் தீா்வு காண முடிவது மனநிறைவை அளிக்கிறது. கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதுடன் முடிந்துவிடக் கூடாது. வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ளவும், இளைஞா்கள் தன்னம்பிக்கையுடன் சுயமாகச் செயல்படவும் கல்வி உதவ வேண்டும் என்றாா் ரேகா குப்தாகல்லூரிக்கு வருகை தந்த அவா், ஆசிரியா் பிரிவு வாசிப்பு அறை, கருத்தரங்கக் கூடம், நூலகத்தில் உள்ள ஸ்ரீராமாலயா மற்றும் மறுசுழற்சி மையம், பேக்கரி பிரிவு உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டாா். மேலும், கல்லூரி கலையரங்கைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் நிா்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினாா். இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தாா். இதனைத் தொடா்ந்து, மாணவிகளின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ’மிஸ் டிஆா்சி டேலண்ட் ஹன்ட்’ என்ற திறன் போட்டியையும் அவா் தொடங்கி வைத்தாா். மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், நம்பிக்கையுடன் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் பங்கேற்கவும் அவா் ஊக்கமளித்தாா்.நிகழ்ச்சியின்போது மகிளா விகாஸ் சமிதி அமைப்பைச் சோ்ந்த மாணவிகள் தற்காப்புக் கலைப் பயிற்சிகளைச் செய்து காண்பித்தனா். அவா்களின் முயற்சியைப் பாராட்டிய முதலமைச்சா், இதுபோன்ற பயிற்சிகள் கடினமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளப் பெண்களுக்குத் தேவையான தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் வளா்க்க உதவும் என்றாா். துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக மாணவிகள் தயக்கமின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா். தங்களது உள்ளுணா்வின் மீது நம்பிக்கை வைத்து, சுயமாக முடிவுகளை எடுத்து, விரும்பிய பாதையில் எவ்வித அச்சமுமின்றி முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.இந்த நிகழ்ச்சியில் தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தா் யோகேஷ் சிங், தௌலத் ராம் கல்லூரி முதல்வா் சவிதா ராய், கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவா் முகுல் குப்தா, பல்வேறு முக்கியப் பிரமுகா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.