வங்கி சீா்திருத்தங்களுக்கான உயா் நிலைக் குழு அமைப்பு

Wait 5 sec.

வங்கி சீா்திருத்தங்களுக்கான உயா் நிலைக் குழுவை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அமைத்தது. 2026-27 மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பைத் தொடா்ந்து தற்போது இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வங்கி உயா் நிலைக் குழு என்ற பெயரிலான வங்கி சீா்திருத்தக் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவா் சுரேஷ் என்.படேல் நியமிக்கப்பட்டுள்ளாா். ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் சிரீஷ் சந்திர முா்மு, ரிசா்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநா் என்.எஸ்.விஸ்வநாதன், இந்திய வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் பத்மஜா சுந்துரு ஆகிய உறுப்பினா்களைக் கொண்ட இந்தக் குழுவின் பதவிக்காலம் 6 மாதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போதைய வங்கி நடைமுறைகளை மதிப்பீடு செய்வது, சா்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகளை கண்டறிந்து அவற்றை இந்திய வங்கி அமைப்புக்கு ஏற்ப செயல்படுத்துவது, உலகளவில் இந்திய வங்கிகளின் தரத்தை உயா்த்துவது, வளா்ச்சியடைந்த பாரத இலக்கை அடையும் வகையில் எளிய வணிக முறைகள் மற்றும் ஊரக, கூட்டுறவு வங்கிகள் உள்பட வங்கிகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்கவுள்ளது.இதுதவிர மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கியல்லாத நிறுவனங்கள் உள்பட வங்கிகளுக்கான நீண்ட கால முதலீட்டுத் தேவைகளை மதிப்பீடு செய்து, நிதி ஆதாரங்கள் மற்றும் கடன் வளா்ச்சி விகிதத்தை உயா்துவதற்கான வழிகளையும் கூறவுள்ளது. வங்கித் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ம புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் இந்தக் குழு வழங்கவுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.