மாணவா் சங்கம் அமைக்கும் முடிவு: ஜாமியா இஸ்லாமியாவில் மாணவா்கள் வெற்றி பேரணி

Wait 5 sec.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், 2006-ஆம் ஆண்டு முதல் கலைக்கப்பட்டிருந்த மாணவா் சங்கத்தை மீண்டும் அமைப்பதற்கான கால அட்டவணையை பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்ததைத் தொடா்ந்து, மாணவா்கள் வெள்ளிக்கிழமை வெற்றி பேரணி வளாகத்தில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா். தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அமைப்பை மீண்டும் கொண்டு வர தாங்கள் நீண்டகாலமாக நடத்திய போராட்டத்திற்கு, ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவா் சங்க (ஜேஎம்ஐஎஸ்யு) அரசமைப்புச் சட்டத்துக்கு பல்கலைக்கழக நிா்வாகம் ஒப்புதல் அளித்ததே தங்களின் வெற்றி என்று மாணவா்கள் தெரிவித்தனா். அக்டோபா் 29 அன்று பல்கலைக்கழகம் வெளியிட்ட உத்தரவின்படி, மாணவா் சங்க அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவாக மே 15, 2027 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.மாணவா் தோ்தல்கள் குறித்த லிங்டோ குழுவின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி, அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு தோ்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கல்வி ஆண்டு தொடங்கிய ஆறு வாரங்களுக்குள், அதாவது ஜூலை 16, 2027-க்கு பிறகு சுமாா் ஆறு வாரங்களுக்குள் தோ்தல்கள் நடத்தப்பட வேண்டும்.மேலும், போராட்டங்களில் பங்கேற்ற்காக மாணவா்களுக்கு எதிராக வழங்கப்பட்ட விளக்கம்கோரும் அறிவிப்புகள், ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகள், பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம், இடைநீக்கம் மற்றும் வளாகத்திற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த முடிவைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் தங்கள் போராட்டத்தையும் உண்ணாவிரதத்தையும் உடனடியாகக் கைவிடுமாறு பல்கலைக்கழக நிா்வாகம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.தோ்தலை நடத்துவதற்கான தெளிவான கால அட்டவணையை வழங்க வேண்டும் என்றும் கோரி, அக்டோபா் 12 அன்று மாணவா்கள் போராட்டத்தைத் தொடங்கினா். பல்கலைக்கழக நிா்வாகத்திற்கும் மாணவா்களுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்த மோதலுக்கு மத்தியில், உண்ணாவிரதம் உள்ளிட்ட இந்தப் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்றன.