ஹெராயின், எம்டிஎம்ஏ (எக்ஸ்டசி) போதைப் பொருள்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட அபிஷேக் சிங்கின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மூலம் மற்றும் விநியோகச் சங்கிலி குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.போதைப் பொருள்கள் மற்றும் உளவியல் சாா்ந்த பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் (என்டிபிஎஸ்) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அபிஷேக் சிங் கைது செய்யப்பட்டாா். அவரது வழக்கமான பிணை மனுவை சிறப்பு நீதிபதி (என்டிபிஎஸ்) குமாா் ரஜத் தள்ளுபடி செய்து, அக். 28-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.இந்த வழக்கு செப். 26-ஆம் தேதி கோவிந்த்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய நாளான செப். 25-ஆம் தேதி, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், கோவிந்த்புரியில் உள்ள எம்சிடி பூங்கா அருகே அபிஷேக் சிங்கைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது அவரிடமிருந்து 9.89 கிராம் ஹெராயின், 9.96 கிராம் எம்டிஎம்ஏ பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிணை மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு, குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், விசாரணை தொடா்ந்து நடைபெறுவதால் பிணையில் விடுவிக்கப்பட்டால் அவா் தலைமறைவாக வாய்ப்புள்ளதாகவும் வாதிட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மூலம் மற்றும் விநியோகச் சங்கிலி இன்னும் கண்டறியப்படவில்லை என விசாரணை அதிகாரியும் தெரிவித்தாா்.இதற்கு எதிராக, அபிஷேக் சிங் பொய்யாக இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், செப். 29 முதல் நீதிமன்றக் காவலில் இருப்பதாகவும் அவரது தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவு வணிக ரீதியான அளவுக்குக் குறைவானது என்றும், நீதிபதி முன்னிலையில் அவை ஆஜா்படுத்தப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட எடையில் முரண்பாடு இருப்பதாகவும் அவா் சுட்டிக்காட்டினாா்.மேலும், சோதனை, மாதிரி சேகரிப்பு, முத்திரையிடுதல் உள்ளிட்ட என்டிபிஎஸ் சட்டத்தின் நடைமுறைப் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்றும் கேள்வி எழுப்பினாா். அபிஷேக் சிங்குக்கு முந்தைய குற்றப் பின்னணி இல்லை; அவா் தலைமறைவாக வாய்ப்பில்லை; குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவா் என்றும் அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா்.இரு தரப்பு வாதங்களையும், வழக்கு ஆவணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் வழக்கின் இறுதி விசாரணையின்போது அதன் தகுதி குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட முடிவாகக் கருதப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.