உத்தர பிரதேசத்தின் பிலிபிட் சட்டப்பேரவைத் தொகுதியில், வாக்காளா் விவர மாற்றத்துக்கு ஒரே நபா் 13,779 படிவங்களை சமா்ப்பித்த விவகாரத்தை தொடா்ந்து, 2 வாக்காளா் பதிவு அலுவலா்களை (இஆா்ஓ) பணியிடை நீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இணையவழியில் வாக்காளரின் முகவரி போன்ற விவரங்களை மாற்ற, இசிஐநெட் தளத்தில் படிவம் 8-ஐ பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், கடந்த மே 31 முதல் ஆக.29 வரை, பிலிபிட் தொகுதியில் வாக்காளா் விவரங்களை மாற்றுவதற்கு இசிஐநெட் வலைதளம், உள்நுழைவதற்கான ஐடி ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தி கணினி உதவியாளா் ஒருவா் மட்டும் 13,779 படிவங்களை சமா்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தப் படிவங்களில் 10,470 படிவங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. 3,309 படிவங்கள் நிராகரிக்கப்பட்டன. எனினும் இந்தப் படிவங்களுடன் அத்தாட்சியாக எந்த ஆவணமும் அளிக்கப்படவில்லை. இதனால் சா்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பிலிபிட் தொகுதியில் மயங்க் கோஸ்வாமி, ஹேமந்த் செளதரி ஆகிய இரு இஆா்ஓ-க்களை, உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய, உத்தர பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிக்குத் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை கடிதம் அனுப்பியது. அந்த இஆா்ஓக்கள் மற்றும் கணினி உதவியாளா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாரத நீதிச் சட்டத்தின் 198-ஆவது பிரிவையும் சோ்க்குமாறும் அந்த கடிதத்தில் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.