நிஜமா? நிழலா?

Wait 5 sec.

ஓவியம், சுவரோவியம், அச்சு ஓவியம் உள்ளிட்ட கலை வடிவங்களில் முத்திரை பதித்துள்ள 'பத்மஸ்ரீ' தோட்டா தரணி, தனது கற்பனைத் திறனாலும் தனித்துவமான கலைநயத்தாலும் இந்தியக் கலை உலகிலும், திரையுலகிலும் தனி இடத்தைப் பெற்றுள்ளார். இவர் தனது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான கலைப் பயணத்தில் நாயகன், இந்தியன், சிவாஜி, தசாவதாரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களின் கலை வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.1949-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், சிறுவயதிலேயே ஓவியக் கலையில் ஆர்வம் கொண்டவர். இரு தேசிய திரைப்பட விருதுகளையும், 2001-ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருதையும் பெற்றுள்ளார். கற்பனைக்கு வண்ணம் தீட்டி, திரையில் பிரம்மாண்ட உலகங்களை உருவாக்கிய கலைஞர். திரைத்துறையில் 1969-ஆம் ஆண்டு முதல் இன்று வரையில், அதாவது ஐம்பது ஆண்டுக்கும் மேலான அவரது கலைப் பயணத்தை கண்முன் கொண்டுவரும் வகையில், 'தோட்டா தரணி - ஒரு பார்வை: 1969 முதல் இன்று வரை' என்ற கண்காட்சி சென்னையின் லலித் கலா அகாதெமியில் சில தினங்கள் நடைபெற்றது. ஆர்ட்வேர்ல்ட் - சரளாஸ் ஆர்ட் இன்டர்நேஷனல் நடத்திய இந்தக் கண்காட்சியை கலை ஆர்வலர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.இதுபற்றி 'பத்மஸ்ரீ' தோட்டா தரணி கூறியது:'எனக்கு 16 வயதாக இருந்தபோது வரைந்த ஓவியங்கள் உள்பட என் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் உருவாக்கிய படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.1969-ஆம் ஆண்டின் எனது ஆரம்பகால நீர் வண்ண ஓவியங்கள், எனது தந்தையின் நுட்பத்திலிருந்தும், வங்காளப் பள்ளி ஓவியங்களிலிருந்தும் உத்வேகம் பெற்றவை. சில ஓவியங்களில் சரியான வண்ணத்தைப் பெற ஏழு முறை தயாரிக்க வேண்டியிருந்தது. 'சிம்பொனி' தொடர், இசையுடனான எனது நீண்டகால உறவையும் ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன. இசையின் தாளங்களை வண்ணமாகவும் வடிவமாகவும் அது மாற்றுகிறது. நீர் வண்ணங்கள், ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக், பேஸ்டல்கள், கொலாஜ் போன்ற பல வகைகளில் நான் பணியாற்றியுள்ளேன். இவையெல்லாம் கண்காட்சியில் இயற்கை, கட்டடக்கலை, இந்திய மரபுகள், புராணங்கள், இசை, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய தேடல்களைப் பிரதிபலிக்கும். இப்படி 280-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, எனது ஓவியங்கள், வரையும் முறை, அச்சுப்பதிப்புகள், சுவரோவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஒரு விஷயத்தை ஆழமாக ஆராய்ந்த பிறகே வரைவேன். அதுவே எனது வெற்றிக்குக் காரணமாகும். நான் பெரும்பாலும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து 50 முதல் 100 ஓவியங்களை வரைவேன். இதன்பின்னரே அடுத்த கருப்பொருளுக்குச் செல்வேன். இது ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து வெளிப்படுத்தும் வகையில், கலையின் மீதான ஈடுபாட்டை மென்மேலும் எனக்கு அதிகரிக்கச் செய்கிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகும், புதிய விஷயங்களைக் கண்டறிந்து உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இன்றும் இருக்கிறது.இந்தக் கண்காட்சியை நடத்த சுமார் ஒரு வருடமாக முயற்சித்து வந்தேன். எதிர்வரும் தலைமுறையினருக்கு ஓவியக் கலை மீது ஆர்வத்தை இந்தக் கண்காட்சி அதிகரிக்கச் செய்திருக்கும் என்று நம்புகிறேன். கண்காட்சியையொட்டி, டாக்டர் அஷ்ரப் எஸ். பகத் எழுதிய எனது வாழ்க்கை, கலைப் பயணம் குறித்த நூலை தி கே.சி.பி. லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநரான கவிதா தத் வெளியிட்டார்' என்றார் தோட்டா தரணி.