காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 903-ஆக அதிகரித்துள்ளது. 4,250-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி திங்கள்கிழமை ஆறாவது நாளாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. நாடு "கற்பனை செய்ய முடியாத மற்றும் மனதை உலுக்கும்" ஒரு பேரிடரை எதிர்கொண்டு வருவதாகவும், பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளத்தின் முழு அளவை மதிப்பிடுவதில் அதிகாரிகள் சிரமப்பட்டு வருவதாக பிரதமர் ஷா சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த புதன்கிழமை(ஆக 26) ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.போடே கோஷி நதி வெள்ளம், திரிசூலி, நாராயணி நதிகளிலும் கலந்து பெரும் சேதத்தை விளைவித்தது. ரசுவா, நுவாகோட், சிட்டவான், நவல்பராசி கிழக்கு, நவல்பராசி மேற்கு, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்டது.இந்த பெருவெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 903-ஆக உயா்ந்துள்ளதாகவும், 4,250-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடா்ந்து திங்கள்கிழமை ஆறாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர் என தேசிய பேரிடா் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களிலிருந்தும் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சிட்டவான் மாவட்டத்தில் 272 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.நவல்பராசி கிழக்கு மாவட்டத்தில் 207 உடல்களும், நவல்பராசி மேற்கு மாவட்டத்தில் 151 உடல்களும், கோர்கா மாவட்டத்தில் 62 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, நுவாகோட் மாவட்டத்தில் 95 உடல்களும், தடிங் மாவட்டத்தில் 55 உடல்களும், தனாஹு மாவட்டத்தில் 37 உடல்களும், ரசுவா மாவட்டத்தில் 24 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.மேலும், 85 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 320 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 4,247 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தேசிய பேரிடா் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. திபெத்தில் அதிகாரப்பூர்வமாக 16 பேர் பலியாகியுள்ளதாகவும், 546 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது; அங்கு மீட்புக் குழுவினர் உயிருடன் இருப்பவர்களை கண்டறியப் போராடி வருகின்றனர்.பெருவெள்ள பேரிடரில் மாயமானதாகக் கூறப்படும் 4,247 பேரில் நூற்றுக்கணக்கானோர் நேபாள நீர்மின் திட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களாக என என்று நம்பப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடுவதிலும், சிக்கித் தவிப்பவர்களை மீட்பதிலும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராடி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நேபாளத்தின் எட்டு மாவட்டங்களிலிருந்தும் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட புதிய வெள்ளப்பெருக்கு காரணமாக, மத்திய நேபாளத்தில் இருந்த தொங்கு பாலம் ஒன்று நேற்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது.இந்தப் பாலம், கண்டகி மாகாணத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள கண்டகி கிராமப்புற நகராட்சியின் (வார்டு எண் 8) கியால்சோக் பகுதியையும், பிரித்வி நெடுஞ்சாலையில் உள்ள சாரௌடி பகுதியையும் இணைத்தது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த வெள்ளப்பெருக்கின்போது, காலை 11.30 மணியளவில் இந்தபாலம் அடித்துச் செல்லப்பட்டது. பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், கண்டகி கிராமப்புற நகராட்சியின் 7 மற்றும் 8-வது வார்டு பகுதி மக்கள் பிரித்வி நெடுஞ்சாலைக்கான இணைப்பு வசதியை இழந்துள்ளனர்.திரிசூலி-3ஏ உள்ளிட்ட நீா்மின் நிலையத் திட்டப் பகுதிகளின் சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் முயற்சிகளை நேபாளம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய சுரங்க மீட்பு மற்றும் தடயவியல் நிபுணா்கள், சீனாவைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்து வருகின்றனர்; ஆனால் இதுவரை சுரங்கப்பாதைக்குள்ளிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.மாயமானவா்களின் நிலை குறித்து அறிய அவா்களின் குடும்பத்தினா் மருத்துவமனைகளில் கண்ணீருடன் காத்திருக்கின்றனா்.கற்பனை செய்ய முடியாத மனதை உலுக்கும் பேரிடர்இதற்கிடையே, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, நாடு "கற்பனை செய்ய முடியாத மற்றும் மனதை உலுக்கும்" ஒரு இயற்கை பேரிடரை எதிர்கொண்டு வருவதாகவும், பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின் முழு அளவை மதிப்பிடுவதில் அதிகாரிகள் சிரமப்பட்டு வருவதாக சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்."ரசுவாபகுதியில் உள்ள போடே கோஷி நதியில் ஏற்பட்ட பேரழிவு பெருவெள்ளம் காரணமாக, உயிர்ச்சேதம், சொத்து மற்றும் உள்கட்டமைப்பு இழப்புகள் குறித்த முழுமையான விவரங்களைச் சேகரிப்பது மிகவும் கடினமாக உள்ளது," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு மற்றும் தொடர்ந்து நிலவும் ஆபத்துகள் காரணமாக இந்த பணி சவாலானதாக இருந்தாலும், மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.The death toll from the devastating flash floods in Nepal climbed to 903 on Monday with more bodies being recovered, while nearly 4,250 people remained missing, authorities said.