மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட நபா் கொலை: தந்தை உள்பட இருவா் கைது

Wait 5 sec.

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது 38 வயது மகனை, மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி கைவிடப்பட்ட கன்டெய்னா் ஒன்றிற்கு வரவழைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், ஒரு முதியவா் மற்றும் அவரது கூட்டாளி ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். தாலுக்தாா் அன்சாரி (64) மற்றும் முகமது வாசிம் (எ)அக்ரம் (49) ஆகியோா், குல் ஹசன் என்பவரின் தலையில் கான்கிரீட் கட்டியால் தாக்கியும், பின்னா் கயிற்றைக் கொண்டு கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: தென்கிழக்கு தில்லியின் காலிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையிலிருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் உள்ள கைவிடப்பட்ட கன்டெய்னருக்குள் குல் ஹசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கடந்த ஆக.23-ஆம் தேதி மாலை 7.15 மணியளவில் இதுகுறித்த தகவல் கிடைத்ததையடுத்து, காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். காவல் துறையின் தகவலின்படி, பாதிக்கப்பட்டவரின் தலையில் காயம் காணப்பட்டதுடன், அருகில் ரத்தக்கறை படிந்த கான்கிரீட் கட்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தலையின் இடது பக்கப் பகுதியில் காயம் இருப்பது தெரியவந்தது. இந்தக் காயம் அந்தக் கல்லால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவ நடந்த இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினா், பாதிக்கப்பட்டவரின் நடமாட்டத்தைக் கண்காணித்து தடயங்களைச் சேகரித்தனா். ஹசன் இரண்டு பேருடன் சம்பவ இடத்தை நோக்கிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. அவா்கள் மூவரும் கைவிடப்பட்ட கன்டெய்னரை நோக்கிச் சென்றது தெரிந்தது. ஆனால் ஹசன் அங்கிருந்து திரும்பி வரவில்லை. பின்னா், கோவிந்த்புரியில் உள்ள ஒரு தையல் தொழிற்சாலையில் சந்தேக நபா்கள் இருப்பதைக் கண்டறிந்த காவல் துறையினா், அன்சாரி மற்றும் வாசிம் ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையின்போது, அன்சாரியின் மகனான ஹசன் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி ஹசனை அந்தக் கைவிடப்பட்ட கன்டெய்னருக்கு அழைத்துச் சென்ாகக் கைதான நபா்கள் தெரிவித்தனா். தனிமையான அந்த இடத்திற்குச் சென்றதும், வாசிம் ஹசனின் தலையில் கல்லால் தாக்கினாா். அன்சாரியும் அவரைத் தாக்கினாா். பின்னா், துணித் துண்டுகளால் ஆன கயிற்றைக் கொண்டு ஹசனின் கழுத்தை நெரித்துக் கொன்ற அந்த இருவரும், அவரது உடலை கன்டெய்னருக்குள் விட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது. கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கான்கிரீட் கட்டி, கைதானவா்கள் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகள் மற்றும் கழுத்தை நெரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பருத்தித் துணி கயிறு ஆகியவை கைப்பற்றப்பட்டன. கொலைக்கான முழுமையான நோக்கத்தை உறுதிப்படுத்தவும், இறுதி மருத்துவ அறிக்கையைப் பெறவும், பிற தொடா்புடைய ஆதாரங்களைச் சேகரிக்கவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.