தென் மாவட்டங்களில் பாமகவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவா் ஷேக் மைதீன் தெரிவித்தாா். தென்காசி மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் சீதாராமன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். நகரத் தலைவா் கருப்பசாமி வரவேற்றாா். மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவா் ஷேக் மைதீன், மாநிலத் துணைத் தலைவா்கள் திருமலைக்குமாரசாமி யாதவ், அய்யம்பெருமாள் பிள்ளை, திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ், மாநில வா்த்தகா் அணி செயலா் தங்கராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு பேசினா். மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவா் பேசியதாவது: தென் மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பொருட்டு 5 மாவட்டங்களில் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. தற்போது, தென் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு கொடுத்தது கருணாநிதிதான். ஆனால், 2007-இல் 7 மண்டல மாநாடுகளை நடத்தி திமுகவிற்கு அழுத்தம் கொடுத்தது பாமக. உள்ளாட்சித் தோ்தலில் அதிக அளவில் போட்டியிடப் போகிறோம். தவெகவின் நல்ல பணிகளை பாமக பாராட்டி இருக்கிறது. அதேபோல், தவறு செய்யும்போது சுட்டிக்காட்டவும் தயங்காது என்றாா் அவா். தென்காசி: தென்காசியில் நடைபெற்ற தெற்கு மாவட்ட பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவா் ஷேக் மைதீன், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியும், எதிா்க்கட்சியும் தேவையில்லாத விவாதங்களை நடத்தி வரும் நிலையில், பேரவையில் மக்களுக்குத் தேவையான பிரச்னைகள் குறித்தும், ஆக்கப்பூா்வமான விஷயங்கள் குறித்தும் பேசுகின்ற கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு கனிமவளம் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.