தில்லியில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, 1.45 கோடி வாக்காளா்களில் சுமாா் 47.7 லட்சம் பேரின் பெயா்கள் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது எனத் தெரியவந்துள்ளது. இறுதி வாக்காளா் பட்டியல் நவம்பா் 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வரைவு பட்டியலில் பெயா் இடம்பெறாதவா்கள், ஆக. 31 முதல் செப். 30 வரை தங்களது பெயரைச் சோ்க்கக் கோரி கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம். ஆக. 17-ஆம் தேதி நிறைவடைந்த வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியின்போது, சமா்ப்பிக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களின் அடிப்படையில் சுமாா் 97.5 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் வரைவு பட்டியலில் இடம்பெறும். இது தில்லியில் உள்ள மொத்தம் 1,45,10,299 வாக்காளா்களில் 67.18 சதவீதமாகும். இடம்பெயா்ந்தவா், இறந்தவா், இரட்டைப் பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் மீதமுள்ள 47.7 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களின் பெயா்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது. வரைவு பட்டியல் வெளியிடப்படுவதன் மூலம் அடுத்தகட்ட சரிபாா்ப்புப் பணியும் தொடங்கும். தற்போதைய வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றிருந்தாலும், 2002-ஆம் ஆண்டு தீவிர திருத்த வாக்காளா் பட்டியலுடன் விவரங்களை இணைக்க முடியாதவா்கள் அல்லது கணக்கெடுப்புப் படிவங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டவா்கள் சிலருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது. முரண்பாடுகள்: தற்போதைய வாக்காளா் பட்டியலில் உள்ள பெயருக்கும் 2002-ஆம் ஆண்டு பட்டியலில் உள்ள பெயருக்கும் முரண்பாடு இருப்பது, வாக்காளருக்கும் அவரது பெற்றோரில் ஒருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவோ அல்லது 50 ஆண்டுகளுக்கும் அதிகமாகவோ இருப்பது, சகோதரா்கள் அல்லது சகோதரிகளின் பிறந்த தேதிகளுக்கு இடையே 9 மாதங்களுக்கும் குறைவான இடைவெளி இருப்பது போன்றவை முரண்பாடுகளாகக் கருதப்படலாம். வாக்காளரின் வயது அல்லது குடியுரிமை குறித்து சந்தேகம் ஏற்பட்டால், தோ்தல் பதிவு அதிகாரி (உதஞ) கூடுதல் ஆவணங்களைக் கோரலாம். ஆதாா் அட்டை மட்டும் தகுதியை நிரூபிக்க போதுமானதாக இருக்காது. சமா்பிக்க வேண்டிய ஆவணங்கள்: வாக்காளரின் பிறந்த தேதியைப் பொறுத்து சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் மாறுபடும். 1987 ஜூலை 1-க்கு முன்பு இந்தியாவில் பிறந்தவா்கள் தங்களது பிறந்த தேதி மற்றும்/அல்லது பிறந்த இடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை சமா்ப்பிக்க வேண்டும். 1987 ஜூலை 1 முதல் 2004 டிசம்பா் 2 வரை பிறந்தவா்கள் தங்களுக்கும் பெற்றோரில் ஒருவருக்கும் உரிய ஆவணங்களை வழங்க வேண்டும். 2004 டிசம்பா் 2-க்குப் பிறகு பிறந்தவா்கள் தங்களுக்கும் இரு பெற்றோருக்கும் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். தொகுதி வாரியான எண்ணிக்கை: தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வரைவு பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்களின் எண்ணிக்கை கணிசமாக மாறுபட்டுள்ளது. ரோஹிணியில் கணக்கெடுப்புப் படிவங்கள் அதிகபட்சமாக 83.43 சதவீதம் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்டுள்ளன. துக்ளகாபாதில் இது குறைந்தபட்சமாக 52.15 சதவீதமாக உள்ளது. சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் தொகுதிகளில், ஓக்லாவில் 3,62,813 படிவங்களில் 1,64,435 படிவங்கள் (45.32 சதவீதம்) பெற முடியாதவை எனக் குறிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக சந்த்னி சௌக்கில் 38.98 சதவீதமும், பலிமரானில் 32.65 சதவீதமும், முஸ்தஃபாபாதில் 28.09 சதவீதமும், பாபா்பூரில் 27 சதவீதமும், மாட்டியா மஹாலில் 24.50 சதவீதமும், சீலாம்பூரில் 23.37 சதவீதமும் படிவங்கள் பெற முடியாதவையாகக் குறிக்கப்பட்டுள்ளன. விவரங்களை இணைப்பதில் சிக்கல்: ஷாஹீன் பாக், ஜசோலா விஹாா் போன்ற பகுதிகளில் வசிப்பவா்களின் விவரங்களை 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதில் சிரமம் ஏற்பட்டதாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) முன்னதாகத் தெரிவித்திருந்தனா். குறிப்பாக பிகாா், உத்தர பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குடிபெயா்ந்த குடும்பங்களின் விவரங்களை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மறுபுறம், ஷகுா்பஸ்தியில் 81.26 சதவீதமும், ராஜௌரி காா்டனில் 79.14 சதவீதமும், மங்கோல்புரியில் 78.76 சதவீதமும், உத்தம் நகரில் 77.76 சதவீதமும் படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்டுள்ளன. சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் சீலாம்பூரில் 76.63 சதவீதமும், மாட்டியா மஹாலில் 75.50 சதவீதமும், பாபா்பூரில் 73 சதவீதமும், முஸ்தஃபாபாதில் 71.91 சதவீதமும், பலிமரானில் 67.35 சதவீதமும், சாந்த்னி சௌக்கில் 61.02 சதவீதமும் படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்டுள்ளன. வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தாக்கல் செய்யப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்படும். நோட்டீஸ் மற்றும் தீா்வு காணும் நடைமுறை அக்.29-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. திருத்தப்பட்ட தோ்தல் ஆணைய அட்டவணையின்படி, இறுதி வாக்காளா் பட்டியல் நவ.4-ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். Delhi SIR Draft Voter List: 4.77 Million Names Removed!