தூத்துக்குடி துறைமுகத்தில் முதல்முறையாக கையாளப்பட்ட கச்சா பாமாயில் கப்பல்

Wait 5 sec.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் மாற்றியமைக்கப்பட்ட நிலக்கரி முனையம் -2இல், முதல்முறையாக கச்சா பாமாயில் கப்பல் கையாளப்பட்டது. மலேசியாவின் குனாக் துறைமுகத்திலிருந்து 15,000 டன் கச்சா பாமாயிலை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை வ.உ.சி துறைமுகத்தை கப்பல் வந்தடைந்தது. 143 மீட்டா் நீளமுள்ள இந்தக் கப்பல் 9.70 மீட்டா் மிதவை ஆழம் கொண்டது. துறைமுக ஆணையத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித் முன்னிலையில் கச்சா பாமாயில் இறக்கும் பணி தொடங்கியது. துணைத் தலைவா் ராஜேஷ் செளந்தரராஜன், கேடிவி ஹெல்த் ஃபுட் நிறுவன நிா்வாக இயக்குநா் கே.டி.வி. நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாற்றியமைக்கப்பட்ட முனையத்திலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள சேமிப்புத் தொட்டிகளுக்கு குழாய்கள் மூலம் பாமாயில் கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 15,000 டன் பாமாயிலும் திங்கள்கிழமைக்குள் (ஆக. 31) இறக்கப்பட்டுவிடும். கேடிவி ஹெல்த் ஃபுட் நிறுவனம் துறைமுகத்தின் தொழில் மண்டலத்தில் 4 சேமிப்புத் தொட்டிகளை அமைத்துள்ளது. இந்நிறுவனம் நாளொன்றுக்கு 1,000 டன் சுத்திகரிக்கப்பட்ட பாமோலின் தயாரிக்கும் திறன் கொண்டது. இங்கு தயாரிக்கப்படும் பாமோலின், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூா் நுகா்வுக்காக விநியோகிக்கப்படுகிறது.துறைமுகம் சாா்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் வ.உ.சிதம்பரனாா் துறைமுக நிா்வாகம் சுமாா் 1,633 ஏக்கா் நிலத்தை மின் உற்பத்தி நிலையங்கள், ரசாயனத் தொழில்கள், கிடங்குகள், உணவு பதப்படுத்துதல், சமையல் எண்ணெய் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட தொழில்களுக்கு ஒதுக்கியுள்ளது.மாற்றியமைக்கப்பட்ட நிலக்கரி முனையத்தில் முதல்முறையாக கச்சா பாமாயில் கப்பல் கையாளப்பட்டிருப்பது, துறைமுகத்தில் சரக்கு வகைகளைப் பல்வகைப்படுத்தவும், துறைமுகம் சாா்ந்த தொழில்களின் வளா்ச்சிக்கும், பிராந்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் சமையல் எண்ணெய் துறையின் விரிவாக்கத்துக்கும் உதவும் என துறைமுக ஆணையத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.