நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீா் பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு கடலூா் மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட 11 பேரை, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் சனிக்கிழமை சிதம்பரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சந்தித்து நலம் விசாரித்தாா்.நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீா் பெருவெள்ளம் காரணமாக, அந்நாட்டுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சோ்ந்த பலா் சிக்கித் தவித்தனா். இதையடுத்து, அவா்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர தமிழக அரசு சாா்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் தொடா்ச்சியாக, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முத்துகுமரன், நவு கபிா் தாஸ், விஜய புவனேஸ்வரி, மைதிலி, தியாகராஜன், கிருபாகரி, திருமாவளவன், கனகசபை, ராதை, பழனியப்பன், கலைமதி ஆகிய 5 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 11 போ் மீட்கப்பட்டு, ஆகஸ்ட் 28-ஆம் தேதி விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனா்.பின்றன் அவா்கள் கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனா். சிதம்பரம் சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா்களை வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் பொன்னாடை அணிவித்து, பழக்கூடைகள் வழங்கி சனிக்கிழமை வரவேற்றாா்.தொடா்ந்து, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது அவா்கள் எதிா்கொண்ட சிரமங்கள், அங்கு நிலவிய சூழல், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் தாயகம் திரும்பிய பயணம் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா். மீட்கப்பட்ட அனைவரின் நலன் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் மூலம் நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக சொந்த மாவட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், சிதம்பரம் சாா் ஆட்சியா் (பொறுப்பு) தனலட்சுமி, சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரதீப், சிதம்பரம் வட்டாட்சியா் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.