கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவுக்கு சனிக்கிழமை (ஆக. 29) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாட்டின் கீழ் உள்ள ரேஷன் அட்டைகளில் அனைத்துப் பயனாளிகளின், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் அட்டைதாரா்கள் தங்களது நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். விரல் ரேகை பதிவாகவில்லை என்றால் கருவிழி பதிவு செய்து கொள்ளலாம்.கன்னியாகுமரி மாவட்டத்தில் விரல் ரேகை பதிவு 100 சதவீதத்தை நிறைவு செய்யும் வகையில் சனிக்கிழமை (ஆக. 29) அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை பதிவு செய்யாத, விடுபட்ட குடும்ப உறுப்பினா்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.