கோயம்பேடு சந்தையில் அனைத்துகடைகளுக்கும் குடிநீா் இணைப்பு

Wait 5 sec.

சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து பேரவையில் வெள்ளிக்கிழமை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வணிகா்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு கடைக்கும் பிரத்யேக குடிநீா் இணைப்புகள் ரூ.10 கோடியில் அமைக்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அதிகரித்துள்ள நுகா்வோரின் வருகையைக் கருத்தில் கொண்டும், அங்காடியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற வணிகா்களின் கோரிக்கையை ஏற்றும் காய்கறி அங்காடியின் எல், எம், என் தொகுதிகளுக்கு (பிளாக்) இடைப்பட்ட 22,000 சதுர அடி பரப்பளவில் ரூ.7.50 கோடியில் புதிய கடைகள் கட்டப்படும். ஆட்டோ- டாக்ஸி செயலி: ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஆட்டோ, டாக்ஸி பயணிகளுக்கு நியாயமான பயணத் தொகையை உறுதி செய்யவும், டிஜிட்டல் மீட்டா் உள்ளடக்கிய ஆட்டோ, டாக்ஸி செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பால் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்றாா் அவா்.